நாடு முழுவதும் ரயில் கட்டணங்கள் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே வாரியம் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய கட்டண விதிகளின்படி, 215 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம் பயணிக்கும் சாதாரண வகுப்பு (Ordinary Class) பயணிகளுக்கு எவ்விதக் கட்டண உயர்வும் இல்லை. ஆனால், 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் சாதாரண வகுப்புப் பயணிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிப்போருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
உதாரணமாக, 500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் ஒரு பயணி, இனி கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டண சீரமைப்பின் மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்குச் சுமார் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனி ரயில்களில் ELECTRIC KETTLES-க்கு தடை..!! மீறினால் 5 வருஷம் ஜெயில்.. பறந்த வார்னிங்..!!
தினசரி வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில் புறநகர் மின்சார ரயில்கள் (Suburban Trains) மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் (MST) கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஏற்கனவே கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ்பிரஸ் மற்றும் ஏசி வகுப்புகளில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் இனி தங்களது பட்ஜெட்டில் கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது; "பழிவாங்கும் அரசியலை நிறுத்துங்கள்" ப.சிதம்பரம் காட்டம்!