நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சபாநாயகர் சுமத்தியுள்ளக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானது என்றும், இது ஒரு திட்டமிடப்பட்ட அவதூறு என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையாகச் சாடியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்றத்தை பாஜக தனது கட்சி அலுவலகம் போல நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் ஜோதிமணி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பேச உரிமை உண்டு. ஆனால், கடந்த நான்கு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச விடாமல் பாதுகாப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சர்கள் முட்டுக்கட்டைப் போட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பேசி முடித்தப் பின்னரேப் பிரதமர் பதில் உரை ஆற்ற வேண்டும் என்பதுதான் மரபு. ஆனால், யாரையுமேப் பேச விடாமல் பிரதமரை மட்டும் பேச அனுமதிப்போம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே, முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தி குறித்து மிகக் கொச்சையாகப் பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினால், அவைத் தலைவர் அதனைத் தவிர்க்கிறார். ராகுல் காந்தி பேசத் தொடங்கினால் அவரது ஒலிபெருக்கி அணைத்து வைக்கப்படுகிறது. சீன விவகாரம் மற்றும் இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமரின் செயலற்றத் தன்மையை மறைக்கவே இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. வெளியுறவுத் துறை அமைச்சருக்கேத் தெரியாமல், அதானி மற்றும் அம்பானிக்காகப் பிரதமர் இந்த ஒப்பந்தத்தை முடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!
மேலும், உலகத்தையே உலுக்கிய எப்ஸ்டீன் ஆவணங்களில் (Epstein Files) பிரதமர் மோடியின் பெயர் ஏன் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து நாங்கள் விளக்கம் கேட்கத் திட்டமிட்டிருந்தோம். ஒரு மோசமானக் குற்றவாளியுடன் பிரதமருக்கு என்னத் தொடர்பு? இது குறித்து விவாதிக்க அனுமதிக்காத வரை எங்களதுப் போராட்டம் நாளையும் தொடரும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியரசு தின விழா 2026: சிறந்த அணிவகுப்பு குழுவாக இந்திய கடற்படை தேர்வு..!!