தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இன்று காலை சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கோவை வந்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், "இன்றைய சந்திப்பில் தமிழகத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்தே விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பேசத் தொடங்கவில்லை. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அல்லது டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தே யார் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது முடிவாகும். டிடிவி தினகரனை எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஏற்றுக்கொள்வாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு இப்போதே பதில் சொல்ல முடியாது; காலம் தான் பதில் சொல்லும். கடந்த காலங்களில் இந்திரா காந்திக்குக் கருப்புக்கொடி காட்டிய திமுக-வே பின்னாளில் அவருடன் கூட்டணி வைத்த வரலாறும் உண்டு. எனவே, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை. திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு" என்று அரசியல் தத்துவத்தை முன்வைத்தார். தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், கருத்துக் கணிப்புகள் மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிப்பதில்லை என்றும் சாடினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும்: முதல்வருக்கு அமித் ஷா பகிரங்க எச்சரிக்கை!
இதையும் படிங்க: "அமித் ஷாவைச் சந்திக்க மாட்டேன்!" தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணையாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்!