தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) கூட்டணி முடிவு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை தெளிவான அறிவிப்பு எதுவும் வெளியிடாததால், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
தொடக்கத்தில் தே.மு.தி.க. அதிமுக கூட்டணியில் இணைய பேச்சு நடத்தியது. பாஜக தலைமையும் தே.மு.தி.க.வை இணைக்க முயன்றது. ஆனால், தே.மு.தி.க. தரப்பில் '10 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட், மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி' என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக - பாஜக தலைமை கடுப்படைந்து தே.மு.தி.க.வை ஓரம் கட்டியது.
இதையடுத்து தே.மு.தி.க. திமுக கூட்டணியில் சேர பேச்சு நடத்தியது. திமுக தரப்பில் ஆறு தொகுதிகள் வரை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தே.மு.தி.க. 'எட்டு தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட், தேர்தல் செலவுக்கு நிதி' என கேட்டது.
இதையும் படிங்க: விஜயகாந்த் செய்த அதே தவறு! வாய்ப்புகளை வீணடிக்கும் பிரேமலதா! தேமுதிக அவ்வளவுதானா?
சமீபத்தில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

அப்போது முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரேமலதாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால் தே.மு.தி.க. நிர்வாகிகளிடையே 'கூட்டணி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்' என்ற எதிர்பார்ப்பு பரவியது.
ஆனால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை திரும்பிய பிரேமலதா, கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேநேரம் தனியார் பேட்டியில் "கூட்டணி குறித்து வெகு விரைவில் நல்ல செய்தியை சொல்வேன்" என்று மட்டும் கூறினார். இதனால் கட்சியினர் மேலும் குழப்பமடைந்துள்ளனர்.
தே.மு.தி.க. தொண்டர்கள் பலரும் 'எப்போது முடிவு வரும்?' என்று கேட்டு வருகின்றனர். கட்சி தலைமை தெளிவான நிலைப்பாடு எடுக்காதது, தேர்தல் தயாரிப்புகளை பாதிக்கும் என்ற அச்சமும் உள்ளது. தமிழக அரசியலில் தே.மு.தி.க.வின் முடிவு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக?! அடுத்தவாரம் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!