நாகை மாவட்டம், பனங்குடியில் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் சிபிசிஎல் கடந்த 2019ஆம் ஆண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு, வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வலுக்கட்டாயமாக விளைநிலங்களைப் பறித்து, நிலத்திற்கான இழப்பீட்டினைத் தராமல் ஏமாற்றி வருவதாக கூறி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடி வரும் அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி வருவது அப்பட்டமான எதேச்சதிகாரப் போக்கு என தெரிவித்தார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டத்தில் உள்ள பனங்குடி, நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, வேளாண் நிலங்களை அபகரித்து சிபிசிஎல் நிறுவனத்திடம் வழங்கிய தமிழ்நாடு அரசு, ஐந்து ஆண்டுகளாகியும் அதற்கான இழப்பீட்டினைப் பெற்றுத்தராமல் ஏமாற்றி வருவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல் என தெரிவித்தார்.

பொன் விளைந்த பூமியான விளைநிலத்தை ஒன்றும் செய்யாமல் கருவேலங்காடாக மாற்றிய சிபிசிஎல் நிறுவனம், மேலும் 620 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது ஏன்., விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுப்பது ஏன்., என சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தெரு முழுக்க மெண்டல்கள் தான் போல... ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக MLA!
விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக, எண்ணெய் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா., இதற்குப் பெயர்தான் சமூக நீதியா., இதுதான் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும் முறையா என சீமான் கேட்டுள்ளார்.
பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்துக்கு தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து பறித்துக் கொடுத்த விளைநிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கலந்து பேச இருக்கிறோம்! மதுரை தூய்மை பணியாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!