ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர்களுக்கு பெரும் நன்மை தரும் ஒரு முக்கியமான சீர்திருத்தத்தை திட்டமிட்டு வருகிறது. செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு மாறும் வசதி போலவே, வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் வாய்ப்பை உருவாக்க ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது.
இந்த யோசனை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட 'பேமெண்ட்ஸ் விஷன் 2028' என்ற தொலைநோக்கு ஆவணத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் வங்கி சேவைகளை மாற்றும் போது ஏற்படும் பல சிரமங்களை தீர்க்க 'பேமெண்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ்' (Payments Switching Service - PaSS) என்ற புதிய மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஒரு வங்கி கணக்கை மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்பினால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சேவைகளை ஒவ்வொன்றாக புதிய வங்கியில் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பளக் கிரெடிட், மியூச்சுவல் ஃபண்ட் SIPகள், கடன் தவணைகள் (EMI), இன்சூரன்ஸ் பிரீமியம், பில் பேமெண்ட்கள் உள்ளிட்ட அனைத்து ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்களையும் தனித்தனியே மாற்ற வேண்டும். இது நேரம் எடுப்பதோடு, தவறுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதையும் படிங்க: கோவை வடக்கா? மொடக்குறிச்சியா? அண்ணாமலை களமிறங்குவது எங்கே? பாஜக வட்டாரங்களில் கசிந்த தகவல்!
இந்த சிரமம் காரணமாக பலர் தங்களுக்கு பிடிக்காத வங்கியிலேயே தொடர்ந்து இருக்க நேரிடுகிறது. இந்த பிரச்சினையை முழுமையாக தீர்க்கும் வகையில், புதிய சுவிட்சிங் சர்வீஸ் அமைக்கப்படும். இதில் அனைத்து வரவு-செலவு உத்தரவுகளும் (payment mandates) ஒரே இடத்தில் மையப்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குடன் தொடர்புடைய அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றுவதற்கு எளிய செயல்முறை உருவாக்கப்படும். கணக்கு எண் மாறாததால், பழைய விவரங்கள் அப்படியே தொடரும்.இந்த மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கும். சிறந்த வட்டி விகிதம், குறைந்த கட்டணங்கள், மேம்பட்ட டிஜிட்டல் சேவைகள் அல்லது வசதியான வங்கியைத் தேர்வு செய்ய எந்த தடையும் இருக்காது.

ஒரு வங்கியின் சேவை திருப்தியளிக்கவில்லை என்றால், எளிதாக மற்றொரு வங்கிக்கு மாறலாம்.இதன் மூலம் வங்கித் துறையில் ஆரோக்கியமான போட்டி அதிகரிக்கும். வங்கிகள் தங்கள் சேவைகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும் தூண்டுதலாக அமையும். இறுதியில், இந்திய வங்கி அமைப்பு மிகவும் வாடிக்கையாளர் நட்பு சார்ந்ததாக மாறும்.
ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம், டிஜிட்டல் பேமெண்ட் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, வசதி மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டு இந்த தொலைநோக்கு ஆவணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் நிதி சேவைகள் துறை ஒரு புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிச்சே தீருவோம்... டிடிவி தினகரன் சூறாவளி பிரச்சாரம்..! முழு விவரம்..!!