இந்தியக் கடல் எல்லையை ஒட்டித் தங்களது அன்றாட வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அராஜகத் தாக்குதல்களும் தொடர் கைது வேட்டைகளும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உடனடி விளக்கத்தைக் கோரியுள்ளார் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி..
நேற்றைய தினம் வழக்கம் போல் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 அப்பாவி மீனவர்களைப் பன்னாட்டுக் கடல் எல்லையைக் கடந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அநியாயமாகக் கைது செய்துள்ளதோடு, அவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து சிறையிலடைத்துள்ளனர். பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நம்பி வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான தமிழகக் கடலோரக் குடும்பங்களின் வயிற்றிலடிக்கும் வகையிலான இலங்கை அரசின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை மத்திய அரசு கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களிடையே கடும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மட்டும் 1,306 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் 179 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுப் பறிபோயுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், இத்தகைய கொடூரத் தாக்குதல்களிலிருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பொறுப்பை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்குடன் தட்டிக்கழித்து வருகிறது எனக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!
இந்திய - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் இணைந்து உடனடியாகக் கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து, சர்வதேசக் கடல் எல்லையில் நடக்கும் இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், எல்லைத் தாண்டல் என்ற போர்வையில் அப்பாவி மீனவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தூதரகத் தீர்வினைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடலில் உயிர் ஆபத்துகளுக்கிடையே போராடி வாழ்ந்து வரும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் உயர்மட்டத் தூதரகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் உடனடியாக விடுவித்து, பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் வாழ்வாதாரப் படகுகளை மீட்டெடுக்க அதிவிரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்குக் காரசாரமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு சதி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!