சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடன் சுமை குறித்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தரவு ஆய்வுத்துறைத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் தொகை உத்தரப்பிரதேசத்தை விட அதிகமாக உள்ளதாகவும், இது கவலைக்குரிய நிலை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பல்லடத்தில் நடைபெறவுள்ள மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, செய்தியாளர்களிடம் பேசினார்.
“கடந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை வளர்ச்சியற்ற, கடன் சுமை கொண்ட மாநிலமாக விட்டுச் சென்றனர். ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அயராத உழைப்பால் இன்று இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது” என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் கடன் குற்றச்சாட்டுக்கு இது பதிலடியாக அமைந்தது.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியை கைவிடும் ஸ்டாலின்! உதயநிதியும் தொகுதி மாறும் திட்டம்! சர்வே முடிவால் திமுக அதிர்ச்சி!
இந்நிலையில், கனிமொழியின் கருத்தை மேற்கோள் காட்டி பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக நிலுவைக் கடன் உள்ளது.

2010இல் உத்தரப்பிரதேசத்தின் கடன் தமிழ்நாட்டை விட இரு மடங்கு அதிகமாக இருந்தது. இப்போது தமிழ்நாட்டின் கடன் உத்தரப்பிரதேசத்தை விட அதிகமாகிவிட்டது. வட்டிச் சுமையில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதமும் கோவிட்-க்கு முந்தைய நிலையை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி மற்றும் பிற அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024-25இல் தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் சுமார் 8.3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. உத்தரப்பிரதேசம் சுமார் 7.7 லட்சம் கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், கடன்-GSDP விகிதத்தில் தமிழ்நாடு சுமார் 26-28 சதவீதத்தில் உள்ளது. இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த வரம்புக்குள் உள்ளது என்று திமுக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
பிரவீன் சக்ரவர்த்தியின் இப்பதிவு தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு எதிராக இத்தகைய கருத்து வெளியாவது கவனம் பெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கடன் விவகாரம் மீண்டும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு!! சென்னை வரும் பியூஸ் கோயல்! அதிமுக - பாஜக கூட்டணி அடுத்த மூவ்!