தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியில் ஊர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையாகிய நிலையில் வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகள் ஸ்டிக்கர் மூலம் மறைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் SH-93 சாலைப் பகுதியில் புதிதாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டிப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருந்தன. வழக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே ஊர் பெயர்கள் இடம்பெறும் நிலையில், இந்தப் புதிய பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் ஊர் பெயர்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது.
இதையும் படிங்க: வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!
இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை தமிழில் இடம்பெறச் செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் அனைத்தும் பச்சை நிற ஸ்டிக்கர் மூலம் மறைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மட்டுமே வெளிப்படையாகத் தெரியும் வகையில் பலகை காணப்படுகிறது.
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!