தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, நடிகர் மற்றும் பாஜக நிர்வாகி சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் அவர் வெளியிட்ட ‘பகீர்’ கருத்துகள் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு மிகப்பெரிய கட்சியே கிடையாது. உங்களுக்கு வேண்டுமானால் அது பெரிய கட்சியாகத் தெரியலாம்; ஆனால் என்னைப் பொறுத்தவரை தவெக-வை ஒரு கட்சியாகவே நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு கட்சிக்குக் கொள்கை என்பதுதான் மிக முக்கியம். சும்மா வந்து பேசுவதால் மட்டும் ஒரு கட்சி வளர்ந்துவிடாது" என்று விஜய்யை என விமர்சித்தார். "அவர் (விஜய்) அப்படித்தான் பேசுவார், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்றும் அவர் ஏளனமாகத் தெரிவித்தார்.
தனது தேர்தல் நிலைப்பாடு குறித்துப் பேசிய சரத்குமார், "தனிப்பட்ட முறையில் நான் இந்தத் தேர்தலில் எம்.எல்.ஏ ஆக விரும்பவில்லை. எனது நோக்கம் எல்லாம் பாஜக வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுதான். அதற்காகத் தேர்தலில் கடுமையாக உழைப்போம். அதிமுக-வுடன் இணைந்து கூட்டணி தர்மத்தின்படி பாடுபட்டு, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வோம்" எனத் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். மேலும், பியூஷ் கோயலிடம் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்த தனது ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளதாகவும், விரைவில் பாஜக-வின் வெற்றி வியூகம் களத்தில் எதிரொலிக்கும் என்றும் அவர் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அதிமுக - திமுக ரகசியக் கூட்டணி?" அதிமுகவின் முகத்திரையை கிழித்த தவெக நிர்மல்குமார்!!
இதையும் படிங்க: "1.56 லட்சம் பேர் இன்னைக்குதான் செத்தாங்களா?" - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ஜெயக்குமார்!