தமிழகத்தில் போதைப்பொருள் அரக்கனை ஒழிக்கவும், சாதி மற்றும் மத மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்ட ‘சமத்துவ நடைபயணம்’ இன்று மதுரையில் எழுச்சியுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த 2-ம் தேதி திருச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பயணம், 11 நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைக் கடந்து இன்று ‘தூங்கா நகரம்’ மதுரையில் மகுடம் சூடுகிறது. 82 வயதான நிலையிலும், தனது உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும், சமூக ஒருமைப்பாட்டிற்காகவும் வைகோ மேற்கொண்ட இந்த அசாத்தியமான முயற்சி, அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகோவின் இந்தப் புனிதமான சமத்துவப் பயணம் இன்று மாலை மதுரை ஒபுளா படித்துறை பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிறைவு விழாவில் தமிழக அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர். போதைப்பொருட்களின் பிடியில் சிக்கியுள்ள இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை இந்தப் பயணத்தின் ஒவ்வொரு மைல்கல்லிலும் வைகோ வலியுறுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: வைகோவின் 'சமத்துவ நடைபயணம்' இன்று தொடக்கம்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அரசியல் லாபங்களுக்காகச் சாதி மற்றும் மத மோதல்களைத் தூண்டுபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘சமத்துவம்’ என்ற முழக்கத்துடன் இந்தப் பயணத்தை அவர் முன்னெடுத்துள்ளார். கவிப்பேரரசர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட கலைத்துறையினரும் இந்த நிறைவு விழாவில் கலந்துகொண்டு வைகோவின் விடாமுயற்சியைப் போற்றிப் பேச உள்ளனர். மதுரையில் இன்று மாலை அரங்கேற உள்ள இந்த அரசியல் திருவிழாவைக் காணவும், வைகோவின் எழுச்சி உரையைச் செவிமடுக்கவும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒபுளா படித்துறையில் குவியத் தொடங்கியுள்ளனர். 2026 தேர்தலுக்கான ஒரு வலுவான கொள்கைப் பிரகடனமாகவே இந்த நடைபயண நிறைவு விழா பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “போலீஸாரை திரும்பப் பெற முடியாது!” – திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!