தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சுற்று பயணத்தை ஆரம்பித்தார். செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய மக்கள் சந்திப்பு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரையுடன் முதல் கட்ட சுற்றுப்பயணம் முடிவடையும் எனவே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் பல்வேறு மாற்றங்கள் தினமும் செய்யப்பட்டே வருகிறது.
விஜயின் சுற்று பயணத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று பெரம்பூரில் மக்களிடையே உரையாற்றவிருந்தது ரத்து செய்யப்பட்டது. அதே போன்று நாளை மறுநாள் 27 ஆம் தேதி வடச்சென்னை பகுதியில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது அதுவும் ஒரு சில காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜயின் சுற்று பயணத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு, அந்த சுற்றுப்பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுப்பயணம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. டிசம்பர் 20 ஆம் தேதியுடன் சுற்று பயணத்தை முடிக்க இருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி வரை இந்த நீட்டிப்பு என்றும், இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்திருக்கிறது.
மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையில் மட்டும்தான் மக்கள் சந்திப்பை விஜய் நடத்தி வருகிறார். ஒரு சில வாரங்கள் மட்டுமே சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களில் மக்களை சந்திக்கவுள்ளார். ஆனால் தற்போது சனிக்கிழமை மட்டும் திட்டமிட்டுருந்த வாரங்களிலும் ஞாயிற்றுக்கிழமையும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக விஜய் தரப்பில் கூறப்படுகிறது.
விஜய் தனது சுற்றுப்பயணத்தை திடீரென நீட்டிப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், விஜய் சுற்றுப்பயணத்தின் போது காவல்துறை அதிக அளவில் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணங்கள் தவிர்க்கப்படுகிறது. இதனை சரிக்கட்டும் விதமாகத்தான் சுற்றுப்பயண நாட்களை நீட்டிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எத்தனை நாட்கள், எத்தனை மாவட்டங்களில் அவர் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்?, ஏற்கனவே திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் செய்வாரா? அல்லது அதிலும் மாற்றம் செய்யப்படுமா? என்பது வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஈழத்தமிழர்கள் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது வாயே திறக்காத விஜய்... இப்போ வெட்டித்தனமா பேசுறாரு... திருமா அட்டாக்...!
இதையும் படிங்க: பாஜக கொள்கை எதிரினா காங்கிரஸ் கொள்கை நண்பனா? சீமான் சரமாரி கேள்வி...!