ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவுக்கு வில்வித்தையில் அடுத்தடுத்து தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக சாஹில் ஜாதவ்–சிகிதா தனிபார்த்தி ஜோடி வென்ற கலப்பு காம்பவுண்ட் தங்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகளிர் காம்பவுண்ட் அணி பிரிவில் சிகிதா தனிபார்த்தி, ஜோதி சுரேகா வென்னம், பிரித்திகா பிரதீப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சீனாவை 238-234 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. போட்டியின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த இந்திய அணி, இறுதி வரை அந்த முன்னிலையை தக்க வைத்தது.
இதைத்தொடர்ந்து கலப்பு காம்பவுண்ட் பிரிவில் சாஹில் ஜாதவ் மற்றும் சிகிதா தனிபார்த்தி ஜோடி தென் கொரியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் 157 புள்ளிகளில் சமநிலையில் முடித்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!
அதில் இந்திய ஜோடி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கலப்பு காம்பவுண்ட் அணிக்கான தகுதி இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.

இதன் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் வில்வித்தை தங்க எண்ணிக்கை மேலும் உயர்ந்தது.
இதற்கிடையே குத்துச்சண்டையில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரியா கங்காஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் சீனாவின் யாங் செங்யுவிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலம் கிடைத்தது.
செப்டம்பர் 30 காலை நிலவரப்படி இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பதக்கப் பட்டியல் போட்டிகள் முடிவடையும் நேரத்தைப் பொறுத்து மாறிக்கொண்டிருப்பதால், இந்தியாவின் மொத்த எண்ணிக்கையும் தரவரிசையும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!