சமூக வர்க்கத்தின் அடித்தளத்தைச் சேர்ந்த கலைஞர்களின் உணர்வையும், வாழ்வியலையும் வெளிக் கொண்டுவரும் ஒரு முக்கியமான முயற்சியாக, '300 கோமாளிகள்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமான பா. கிரிஷ் இயக்கியிருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெற்றியை நோக்கி மட்டுமல்லாது, சமூக உணர்வுடன் கூடிய ஒரு ஆழமான கதையை பேசும் இத்திரைப்படம், தெருக்கூத்து எனப்படும் நம் நாட்டின் பாரம்பரியக் கலை வடிவத்தின் பின்னணியில் ஆழமான மனித நேயத்துடன் நகர்கிறது.
அலெக்ஸ், செல்ல முத்தையா, அக்னி மோகன், விக்னேஷ் ரவி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மோசமான சூழ்நிலைகள், அவர்களின் குறைகள், எதிர்பார்ப்புகள், மற்றும் சமூகத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் மனஉளைச்சல் போன்றவை மிக நுணுக்கமாக காண்பிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க சென்னையில் இப்படத்தின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரையுலகின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்து கொண்ட மூத்த இயக்குனரான ஆர்.கே.செல்வமணி பல்வேறு முக்கியமான கருத்துகளை முன்வைத்து பேசினார். அவர் பேசுகையில், "எல்லாரும் சினிமாவில் உழைக்கிறோம். ஆனால் பெரும்பாலான இடங்களில் வெற்றிக்கேற்ப தான் சம்பளம் கிடைக்கிறது, உழைப்புக்கேற்ப கிடைப்பதில்லை. இது மிகவும் வருத்தமான விடயம். சினிமா ஒரு தொழில்துறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக பலர் பல நிலைகளில் முயற்சி செய்து வருகின்றனர்..

ஒரு படத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள்? அவர்கள் அனுபவம் என்ன? சம்பள நிலை என்ன? என அனைத்து தரவுகளையும் தொகுத்து அரசுக்கு கொடுத்து, இதை ஒரு சட்டபூர்வ தொழிலாக உருவாக்க வேண்டும். இன்று ஹாலிவுட்டில் சம்பளம், பட்ஜெட், வசூல் என எல்லா விபரங்களும் வெளிப்படையாக இருக்கின்றன. ஆனால் நம் இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமாவில் அந்த வெளிப்படைத்தன்மை இன்னும் இல்லை. இதுவே ஒரு படம் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்துவிட்டது" என்றார் இயக்குனர் செல்வமணி. இப்படம் வெளியானதிலிருந்து, திரையுலகத்திலும் பொதுமக்களிடையிலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்..!
தெருக்கூத்து என்பது வெறும் பண்டைய பாரம்பரிய கலை என்பதற்கல்லாது, அதில் வாழும் கலைஞர்களின் உண்மை நிலையை ஒளிப்படமாக பதிவு செய்துள்ள '300 கோமாளிகள்', விமர்சகர்களிடையிலும், திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர்களிடையிலும் புகழ்பெற்றுவருகிறது. இதை அடுத்து, 14-வது கொல்கத்தா சர்வதேச குறும்பட விழாவில் இத்திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இது ஒரு குறும்படமாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் ஒரு முழுநீள சமூகச் சிந்தனையை கொண்டதாக இருக்கிறது. திரைத்துறையை அரசியல், சமூக பரிமாணங்களுடன் கலந்த ஒரு ஊடகமாக மாற்றும் வகையில், இப்படம் எடுத்த முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் டைட்டில் ‘300 கோமாளிகள்’ என்றதும், அது நம்மை சிந்திக்க வைக்கும். உண்மையில் இதில் "கோமாளி" என்பது கலைஞர்களைப் பொருத்தது. ஆனால், அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை மதிக்காமல் எதிர்பார்க்கும் சமுதாயத்தின் பார்வையையும் இந்த தலைப்பு கேள்வி எழுப்பும் வகையில் முன் வைக்கிறது. அந்த வழியே, ஒரு மாபெரும் சமூகக் கதையை, எளிமையான படைப்பூக்கத்துடன் கொண்டு வந்து இருக்கிறார் பா. கிரிஷ். இப்படம் அடுத்த கட்டமாக, வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்லாது, சமூகத்தில் ஒலிக்கும் ஒரு சக்தி என்பதை இந்த திரைப்படம் நிரூபிக்கிறது. இப்படத்தின் வெற்றி, இந்திய சினிமாவில் குறிப்பாக குறும்படக் களத்தில் சமூக உணர்வு வாய்ந்த படைப்புகளுக்கு கிடைக்கும் ஒரு முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. '300 கோமாளிகள்' திரைப்படம், கலைஞர்களின் குரலாகவும், சினிமாவின் தொழில் மயமாதலுக்கான புதிய தொடக்கமாகவும் உருமாறும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: 5 நாட்கள் ஹாஸ்பிடலில்.. நடிகை ராதிகா சரத்குமாருக்கு என்ன ஆச்சு..?