பிரபல யூடியூப் ராப் பாடகராக இருந்து, தற்போது தென்னிந்திய திரைப்பட உலகிலும் தனது இசைத் திறமையால் தனித்தடம் பதித்திருக்கும் வேடன், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூக ஊடகங்களிலும், சினிமா இசை ரசிகர்களிடமும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இவர் மீது, தற்போது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்துள்ளது. வேடன் என்ற பெயரில் வலம் வரும் இந்த இசைக்கலைஞர், இந்திய ராப் உலகில் கடந்த சில ஆண்டுகளாக வலுவாக பணியாற்றி வருகிறார். தன்னிச்சையாக எழுதும் சமூக குறும்பாடல்கள் மற்றும் நேரடி கதைக் கூறல்கள் மூலம் அவர், யூடியூபில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
பெரும்பான்மையான ராப் பாடல்களில் சமூக அக்கறை, கிளர்ச்சி மற்றும் வன்முறையை எதிர்த்து எழுச்சியாக குரல் கொடுப்பது இவரது வழக்கம். அதேசமயம், அவரது சில பாடல்கள் வணிக ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, 2023-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'குத்தந்திரம்' பாடல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றார். இந்த வாய்ப்பு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள முன்னணி இயக்குநர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. இப்படி இருக்க சமீபத்தில், நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாடா வேடா' என்ற பாடலையும் வேடன் எழுதி, பாடியிருந்தார்.

இந்தப் பாடலும் இசை ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் மூலம், அவர் முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே தனது பெயரையும் நிலை நிறுத்தி கொண்டார். இந்த நிலையில், தற்போது ஒரு பெரும் குற்றச்சாட்டில் அவர் சிக்கி இருக்கிறார் என்ற செய்தி வெளியாக, திரையுலகம் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி, கேரளாவின் கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில், ஒரு இளம் பெண் மருத்துவர், வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் அளித்து, தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார் வேடன்" என அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகாரின் அடிப்படையில், திருக்காக்கரா காவல் துறையினர், வேடனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் பின்னணியில், இருவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பேசும் '300 கோமாளிகள்'..! இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆவேசம்..!
மேலும், இதன் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவுள்ளதோடு, தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை வேடன் அல்லது அவரது தரப்பில் இருந்து இதுதொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் இது தொடர்பாக பரப்பப்படும் தகவல்கள், அவருடைய ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் வளர்ந்து வரும் புதுமுகங்களுக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகள், அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனாலேயே, எந்தவொரு புகாரும் முழுமையாக விசாரிக்கப்பட்ட பிறகே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில், வேடன் மீது உள்ள புகாரின் விவரங்கள், காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா மற்றும் இசைத் துறையில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வரும் வேடனின் மேல் ஏற்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள், அவரது எதிர்கால வாய்ப்புகளை பாதிக்குமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்..!