ஒரு திரைப்படம் பலரது வாழ்க்கையை மாற்றி இருக்கிறது என்றால் அதுதான் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகி இருக்கும் "பறந்து போ" திரைப்படம். இதுவரை எடுத்த நான்கு திரைப்படங்களில் பலரது ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஒரே இயக்குனர் என்றால் அவர் தான் இயக்குநர் ராம். இவர் இதுவரை கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இப்படி இருக்க, அவரது அற்புதமான படைப்பில் உருவாகி இருக்கும் தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் திரைப்படம் தான் 'பறந்து போ'. இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க அவரோடு அஞ்சலி கிரேஸ், ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பலரது இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் இத்திரைப்படம் தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்க, மிர்ச்சி சிவாவும் அவரது மனைவியும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்க தனது மகனான அன்பு-வை வீட்டிலேயே வைத்து பாதுகாக்கின்றனர். வீட்டிலேயே ஆன்லைன் கிளாசில் படிப்பதால் வெளியுலகம் தெரியாமல் வளரும் அன்பு மிகவும் பிடிவாதம் பிடித்த மகனாக மாறுகிறான். இந்த சூழலில், கடன் தொல்லை தாங்காமல் மிர்ச்சி சிவா தனது மகனான அன்புவை அழைத்துக் கொண்டு பைக்கில் வெளியூருக்கு செல்கிறார்.

ஆனால் பிறந்ததிலிருந்து இதுவரை வெளியே எங்கேயும் செல்லாத தனது அப்பா, கடனுக்கு பயந்து ஓடி வருவதை தெரியாமல் ஏதோ ரோடு ட்ரிப் செல்கிறோம் என்ற எண்ணத்தில் வழிநெடுங்க அன்பும் சிவாவும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் தான் படமாகவே இருக்கிறது. குறிப்பாக திரைப்படத்தின் மையக் கருத்து என்றால் பெற்றோர்களாக இருப்பவர்கள் குழந்தைகளை வளர்க்க தயாராக இருக்கின்றனரா? அல்லது பெற்றோர்களே குழந்தையாக இருக்கிறார்களா? என்பதை வெளிப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் இருக்கிறது. குறிப்பாக தந்தையினுடைய அன்பை ஆழமாக பிரதிபலிக்கும் திரைப்படமாகவும் இப்படம் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இலங்கைக்கு ஜோடியாக பறந்த ரவி மோகன் – கெனிஷா..! முக்கிய புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி..!
இந்த நிலையில் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதோடு, தமிழ் நாட்டைத் தாண்டி வெளிநாடுகளிலும் தமிழர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இப்படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. சினிமா விமர்சகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். கலைமாமணி, தேசிய விருதுகளை வென்ற பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள், 'பறந்து போ' படத்தின் சிறப்புகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆகவே 'பறந்து போ', கதையின் உள்ளடக்கம், இயக்கம், நடிப்பு, மற்றும் மனதைக் கடக்கும் யதார்த்த பிம்பங்களால், 2025-ம் ஆண்டின் சிறந்த கலைப்படங்களில் ஒன்றாக இப்படம் பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்க, இப்படம் இதுவரை ரூ.11 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியால் இயக்குநர் ராமுக்கு மேலும் பல படைப்புகளை உருவாக்கும் ஊக்கமும், இயக்குநராக மிர்ச்சி சிவா உள்ளிட்ட நடிகர்களுக்கான புதிய பாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற படங்கள், தமிழ் சினிமாவின் தரத்தை மேலும் உயர்த்தும் என்று நம்பலாம். 'பறந்து போ' உண்மையிலேயே ரசிகர்கள் மனதில் பறந்து சென்றிருக்கிறது.
இதையும் படிங்க: தம்பதிகளுக்கு கல்யாணம் செய்து வைத்த தளபதி விஜய்..! இயக்குநர் பார்த்திபன் ஓபன் டாக்..!