தமிழ் சினிமாவில் இயக்குநர்களும் நடிகர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை கலைவுலகத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சி பல ஆண்டுகளாக நடந்தே வருகின்றது. இந்த வரிசையில், நடிகர் விஷ்ணு விஷால், தனது தம்பி ருத்ரா விஷால்-ஐ "ஓஹோ எந்தன் பேபி" படத்தின் மூலம் ஹீரோவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படத்தினை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். காதலின் பல பரிமாணங்களை எடுத்துச் செல்லும் இந்த அற்புதமான காதல் கதை, 'ரொமாண்டிக் கலந்த காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காதல், பிரிவு, உணர்ச்சி, நகைச்சுவை என பல பரிமாணங்கள் அடங்கி இருப்பதால் இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட இந்த கதையின் சுருக்கம் என பார்த்தால், ருத்ரா என்பவர் உதவி இயக்குநராக இருந்து, இயக்குநராக மாற விரும்புகிறாராம். அந்த கனவிற்கான கதையை ஹீரோவுக்குச் சொல்வதற்காக சென்று அவரை சந்திக்கிறார். அவர் சொன்ன கதைகள் பிடிக்காததால் ஹீரோவான விஷ்ணு, “ஒரு நல்ல காதல் கதையா சொல்லு.. பா” என அறிவுறுத்த, தன் வாழ்க்கையையே கதையாக அவர் சொல்லத் தொடங்குகிறார்.
அதன்படி, முதல் காதல் தோல்வி. இரண்டாவது காதல் தோல்வி. மூன்றாவது காதல் மித்திலா என்கிற பெண்ணுடன். திருமணம் வரை செல்லும் பொழுது தாலிகட்டும் நேரத்தில் ஏற்படும் மனமுடைவு, பிரிவு என அனைத்தையும் வைத்து இதுதான் ருத்ரா ‘கதையின் முடிவு’ என்கிறார். ஆனால் விஷ்ணு, "இதுதான் இன்டர்வெல் பாஸ், இரண்டாம் பாதி எங்கே?" எனக் கேட்கிறார். அதன்பின், பிரிந்த காதலியை மீண்டும் சந்திக்க செல்லும் பயணமே கதையின் இரண்டாம் பாதி. ருத்ரா தன் தவறுகளை உணர்கிறாரா? காதலியின் மனம் மாறுகிறதா? காதல் வெல்லுமா என்று நகரும் இந்த கதை பார்க்க நன்றாகவே உள்ளது.

இப்படம் ருத்ரா விஷாலின் முதல் படமானாலும், அவர் நடித்ததைப் பார்த்தபோது ‘இது அவருக்கு அறிமுகபடம் போன்று தெரியவில்லை’ எனக் கூறும் அளவுக்கு நன்றாக நடித்திருக்கிறார். ஷேவ் செய்தால் ஸ்கூல் பையன்.. லைட்டாக தாடி வைத்தால் காலேஜ் பையன்..புல்லாக தாடி வைத்தால் வேலைக்கு போகும் பையன் என படத்தில் வேறுபட்ட தோற்றங்களுடன் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் மித்திலாபாள் தான் இந்த படத்தின் அழகே. காதல், கோபம், குழப்பம், பயம் என பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், சன் டீவி பார்த்தசாரதி, தனது பாவமான முகத்துடன் வித்தியாசமான கேரக்டரில் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அடுத்து கருணாகரன், கஸ்தூரி போன்ற துணை நடிகர்களின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்கு துணையாக உள்ளது. இயக்குனர் கிருஷ்ணா, "மூன்று காதல்" என்ற கதைக்கருவை தேர்ந்தெடுத்தாலும், அதில் முதல் இரண்டு காதல்களுக்குப் பெரிதாக உளவியல் பின்னணி இல்லாமல் நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதில் முதல் காதல் 'பி-கிரேட்' படம் போலவே இருந்தது எனவே, அந்த காட்சிகள் சினிமா மேல் வைத்த நம்பிக்கையை சற்றே தவிர்த்ததாக இருந்தன.
இதையும் படிங்க: இரவில் கேட்ட அலறல் சத்தம்...கன்னட சின்னத்திரை நடிகை ஸ்ருதிக்கு கத்திக்குத்து..! கணவன் வெறிச்செயல்..!
இரண்டாவது காதலின் போது ஒரு 'சென்சிட்டிவ்' விஷயம் கலந்திருந்தும், அதை முறையாக கையாள முயற்சித்திருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டாம் பாதியில், கதையின் தீவிரம் குறைந்து 'ருத்ரா' தன் தவறை உணர்கிறார் என்பதை உணர்த்துவதை போல தோன்றும் காட்சிகள் இல்லை. அதேபோல் மிஷ்கின் கூறும் ஒரு வார்த்தையால் கதாநாயகன் மனதில் திடீரென மாற்றம் ஏற்படுவது, மிகவும் சினிமாத்தனமாய் இருந்தது. படத்தின் கிளைமேக்ஸ்-ல் ஷூட்டிங்கில் காதல் ஒன்று சேர்வதைப் போல காட்சிப்படுத்திய விதம், உணர்ச்சி கொடுக்க வேண்டுமா, காமெடியாக பார்க்க வேண்டுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தொழில்நுட்ப தரத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக, ஒவ்வொரு காதல் கட்டத்தையும் தனித்துவமாக பதிவு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இசை மற்றும் பின்னணி இசை பார்த்தால் சூழ்நிலைக்கு ஏற்ற விதமாக அமைந்திருக்கிறது. பாடல்களும் இனிமையாகவே உள்ளன. படத்தின் எடிட்டிங் – ஓரளவுக்கு சரி, ஆனால் இரண்டாம் பாதியில் படத்தை சுருக்கியதால் கதையின் ஓட்டமும் சீர்குலைந்து போனது.

மொத்தத்தில், 'ஓஹோ எந்தன் பேபி' ஒரு ஜென் காதல் கதை என்று சொல்லலாம். ஆனால் சில இடங்களில் 90ஸ் காதலின் மென்மையும் கலந்திருப்பது போலவும் தெரிகிறது. இந்த கலவையே சில நேரங்களில் படம் என்ன சொல்ல விரும்புகிறது என்பதை குழப்பமாக மாற்றுகிறது. நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த கதை உருவாக்கப் பட்டதாக இருந்தாலும், அதை திரைக்கதையாக மாற்றும் கட்டுப்பாடுகள் சில இடங்களில் மோசமாகவே உள்ளன.
இதையும் படிங்க: கருப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை சிவாங்கி..! இடையழகில் கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!