தெலுங்கு சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் தான் ‘கிங்டம்’. இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த இந்தப் படம், கடந்த ஜூலை 31-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியாகி சில நாட்களிலேயே அதிகளவில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில், இலங்கை தமிழர்கள் குறித்து அவமதிக்கத்தக்க காட்சிகள் அமைந்துள்ளன, தமிழர் பண்பாட்டையும், கடவுளரையும் அவமதிக்கும் வகையில் இருக்கும் விஷயங்கள் இப்படத்தில் உள்ளன எனக் கூறி, நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘கிங்டம்’ திரைப்படத்தில், ஒரு வில்லன் கதாப்பாத்திரத்திற்கு “முருகன்” என பெயரிடப்பட்டுள்ளது. இது தமிழ் உணர்வுகள் மீது நேரடியான தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல், இலங்கை யுத்தம் மற்றும் தமிழர் போராட்டம் சார்ந்த பின்னணியில் அமைந்துள்ள காட்சிகளில், இலங்கை தமிழர்களை ‘தீயவர்கள்’ போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வகையான தூண்டுதல் கொண்ட காட்சிகள் தமிழர்களின் சமூக-பண்பாட்டு அடையாளங்களை அவமதிக்கின்றன என நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்தத் தளத்தில், தமிழகத்தின் பல இடங்களில், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில், 'கிங்டம்' திரைப்படத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் திரையிடப்படுவதைக் கண்டித்து, நாடு முழுவதும் வலுப்பெறும் தமிழர் உணர்வுகளுக்கு எதிரான படம் என கூறி, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி இருக்க போராட்டத்தின் போது, தியேட்டருக்கு அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் திரைப்படத்தை நிறுத்தக் கோரி உள்ளே நுழைய முயற்சி செய்த போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆதலால் அந்த இடமே மிகுந்த பரபரப்பான சூழலில் இருந்தது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: சொந்த ஊர் திருவிழாவில் மக்களோடு மக்களாக கும்மியடித்த நடிகர் சூரி..! வைரலான வீடியோ..!
இந்த நிலையில், 'கிங்டம்' திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் வலியுறுத்தல். சமூக வலைதளங்களிலும், பல தமிழ் அமைப்புகளும், இந்தப் படம் தமிழர் உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி தனிப்பட்ட குரல்களை எழுப்பி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, திரைப்படத்திற்கெதிரான எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. அதே சமயம், படக்குழு இதுவரை பொதுமக்கள் போராட்டங்களுக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்துவருவது, விஷயத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ‘கிங்டம்’ திரைப்படம் ஒரு பக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்புத் திறனுக்காக பேசப்படும் நிலையில், இன்னொரு பக்கத்தில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன எனக் கூறி, சமூக, அரசியல் அளவிலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் வலுப்பெற தொடங்கியுள்ளன.

இதனால், திரைப்படத்திற்கு எதிரான எதிர்ப்பு மிகப்பெரியளவில் உருவாகும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் எப்படிப் பதிலளிக்கப்போகிறது என்பது ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா உலகத்தில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: 'கூலி'யில் ஹீரோவே நான் தான்..ரஜினி இல்ல..! நாகார்ஜூனாவின் பேச்சால் குழப்பத்தில் ரசிகர்கள்..!