பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) 12-வது உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்று முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சர்வதேச எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள், ஊடுருவல் முயற்சிகள், கடத்தல் சம்பவங்கள் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த 2001-ம் ஆண்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பாக எஸ்.சி.ஓ. செயல்பட்டு வருகிறது. தற்போது இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதையும் படிங்க: சிந்து நதிநீரை தடுத்தால் கைகளை வெட்டுவோம்!! இந்தியாவுக்கு பாக்., அமைச்சர் பகீரங்க மிரட்டல்!! மீண்டும் பதற்றம்!
மாநாட்டில், உறுப்பு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகள் இடையே தகவல் பரிமாற்றத்தை அதிகரிப்பது, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு சவால்களை கூட்டாக எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள், சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரே மேடையில் பங்கேற்றது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
எல்லை பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு மற்றும் பிராந்திய அமைதியை உறுதி செய்வதில் எஸ்.சி.ஓ. மாநாடு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!