தாமிரபரணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்திய மலை எனும் இடத்தில் உற்பத்தியாகிறது. இந்த ஆறு மலைப்பகுதியில் சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் தொடங்கி, தனது பயணத்தில் பல மலைப்பகுதிகள், காடுகள் மற்றும் சமவெளிகளைக் கடந்து, இறுதியாக மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு சுமார் 128 கிலோமீட்டர் நீளமுடையது. இது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியாகப் பயணிக்கிறது.
இதன் முக்கிய துணை ஆறுகளாக சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாறு, பச்சையாறு ஆகியவை உள்ளன. இந்த ஆறு தனது பயணத்தில் பல அணைகளையும், கால்வாய்களையும் உருவாக்கி, விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை மற்றும் கடனாநதி அணை ஆகியவை இந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தி பாசனத்திற்கு உதவுகின்றன.
இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீரை கலக்க விட்டு திமுக அரசு முற்றிலுமாக அழித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி என மகாகவி பாரதியார் பாட்டெடுத்த தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்து போனதாக குற்றம் சாட்டினார். நெல்லையின் வற்றாத ஜீவநதியாகவும், சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையின் உயிர்நாடியாகவும் பெருக்கெடுத்த தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக ஆளும் அரசு அழித்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் வருத்தமில்ல! நயினார் நல்ல நண்பர்.. மனம் திறந்த டிடிவி..!!

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மையின் அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாத திமுக அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது என்றும் கேள்வி எழுப்பினார்.
அனைத்து உயிர்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தைத் திமுக அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது என்று கூறிய நயினார் நாகேந்திரன், தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த கவலையும் இல்லையா என்ற கேள்வி எழுப்பி உள்ளார். தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களைத் திக்குமுக்காட வைப்பதும் திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ என்றும் திமுக ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ் மீட்