ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அதற்கு கடும் பதிலடி வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்வினையாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தினசரி ஏராளமான எண்ணெய் மற்றும் வர்த்தக கப்பல்கள் பயணம் செய்கின்றன. இந்த பாதையில் ஏற்படும் எந்தவொரு மோதலும் சர்வதேச எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எந்த கப்பல் மீதும் ஈரான் ஏவுகணை, டிரோன் அல்லது வேறு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால், அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் நிலையம் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தும் என்றும், அந்த கட்டமைப்பு தெஹ்ரான் நகரில் அல்லது அதன் அருகில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த எச்சரிக்கை, அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மேலும் தீவிரமடையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலக நாடுகள் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதால், அடுத்தகட்ட நகர்வுகள் மீது சர்வதேச கவனம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி! அதல பாதாளத்தில் சரிந்த செல்வாக்கு! அமெரிக்க மக்களின் அதிருப்தியால் அதிபர் ட்ரம்ப் அதிர்ச்சி!