மேற்காசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்க நிறுவனங்களும் ஈராக் அரசும் இணைந்து மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்காக இரு தரப்புக்கும் இடையே சுமார் ரூ.5.77 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த முக்கிய கடல் வழித்தடத்தை ஈரான் கட்டுப்படுத்தி வருவதால், எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை சமாளிக்க ஹார்முஸ் ஜலசந்தியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அமெரிக்கா மற்றும் ஈராக் புதிய முயற்சியில் இறங்கியுள்ளன.
இதையும் படிங்க: ஹார்முஸை கடந்து இந்தியா வரும் எண்ணெய் கப்பல்கள்!! குட்நியூஸ் சொன்னது மத்திய அரசு!

இதன்படி, கடல் வழிக்கு மாற்றாக நிலத்தின் வழியாக குழாய்கள் அமைத்து கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் முன்னணி எரிசக்தி நிறுவனமான செவ்ரான் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் போக்குவரத்து திட்டம் மட்டுமின்றி, சுகாதாரம், தகவல் தொடர்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அமெரிக்க நிறுவனங்கள் ஈராக்குடன் இணைந்து செயல்பட உள்ளன. இதற்காகவே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளவில் எரிசக்தி பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், ஈராக் - அமெரிக்கா இடையேயான இந்த புதிய ஒப்பந்தங்கள் சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை சார்ந்திருப்பதை குறைக்கும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் அமையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரம்... 7 நாட்களாக ஓயாத தாக்குதல்.. கவலையில் உலக நாடுகள்.!