கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் என்றும் உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் மனுக்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. SIT அமைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு உட்பட 4 வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கரூர் சம்பவம் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வரவேற்றுள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வலி மிகுந்த நாட்களில் பயணம் செய்து வருகிறோம் என்றும் நெருக்கடியான காலகட்டம் என்றும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் விஜயின் சுற்றுப்பயணம் மிகப்பெரிய மக்களின் எழுச்சியாக உருவானது என்றும் பல ஊருக்கு செல்லும்போதெல்லாம் இந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு எழுச்சி இருந்ததாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகப்பெரிய நம்பிக்கையை, அன்பை விஜயின் வருகைக்கு மக்கள் உருவாக்கினார்கள் என்றும் கூறினார். உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்றும் எல்லா மாவட்டங்களிலும் எப்பொழுதும் காவல்துறை பெரிய அளவில் ஆதரவு செய்யவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் ஆதவ் அர்ஜுனா... உண்மை வெளிவரும் என திட்டவட்டம்...!
பெரம்பலூரில் மட்டும் போலீஸ் எச்சரிக்கை விடுத்ததன் பேரில் அதனை நாங்கள் ரத்து செய்தோம் என்றும் நாமக்கல் பயணத்தை முடித்துவிட்டு மக்கள் ஆதரவோடு 3 - 10 மணிக்கு காவல்துறை சொன்ன இடத்தில்தான் நாங்கள் சென்றோம் என்று கூறியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நுழையும்போது காவல்துறை தான் வரவேற்றார்கள் என்றும் திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேச சொன்னதாகவும் தெரிவித்தார். காவல்துறை கொடுத்த நேரத்திலேயே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும் இந்த சம்பவம் நடந்த பிறகு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கரூர் எல்லையில் காத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இழப்பு ஏற்பட்டவுடன் முதல் மூன்று முதல் நான்கு நாட்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம் என்றும் எங்கள் உறவுகள் இறந்த பிறகு மௌனமாக இருந்ததாகவும் அந்த நேரம் திமுக நாடகத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்தார். அவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்பதற்காக யூடியூபர்கள், சமூக வலைத்தளங்களில் பேசுவோரை கைது செய்தார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்தை வைத்து தமிழக வெற்றி கழகத்தை முடக்கும் முயற்சியில் திமுக செயல்படுவதை தாங்கள் அறிந்ததாகவும், ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அரசு தரப்பு நியாயத்தை மட்டுமே உள்துறைச் செயலாளர் பேசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க... அதிரடி காட்டிய கோர்ட்...!