பயங்கரவாத அமைப்பான அல் குவைதா, இந்தியாவில் புதிய பாணியில் ஆட்களை சேர்க்க தொடங்கியுள்ளது. இதுவரை ஏழை இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி வந்த அமைப்பு, தற்போது மருத்துவர்கள், மென்பொறியாளர்கள் போன்ற உயர்கல்வி பெற்ற, சமூகத்தில் மரியாதைக்குரிய நபர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் மூளைச்சலவை செய்கிறது.
கடந்த நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர் ஹரியானாவின் அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய மருத்துவர் உமர் நபி என தெரியவந்தது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவர் எப்படி பயங்கரவாதியானார் என விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு முன்பாக அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவின் புனேயில் மென்பொறியாளர் ஜூபைர் இலியாஸ் ஹங்கர்கேகர் (35) கைது செய்யப்பட்டார். அல் குவைதாவுடன் தொடர்பு கொண்டிருந்ததால் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: டெல்லி கார் வெடிப்பு விவகாரம்!! 4 பேருக்கு காவல் நீட்டிப்பு!! விசாரணையில் விறுவிறுப்பு காட்டும் என்.ஐ.ஏ!
ஜூபைரிடம் நடத்திய விசாரணையில், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக தடைசெய்யப்பட்ட பயங்கரவாத புத்தகங்களை பதிவிறக்கம் செய்தது தெரியவந்தது. அவர் தனது தொடர்பு வட்டத்தில் உள்ளவர்களையும் பயங்கரவாத பாதைக்கு இழுத்துள்ளார்.

மென்பொறியாளர் என்பதால், பிரத்யேக மென்பொருளை உருவாக்கி, வெளிநாட்டு ஐ.பி. முகவரிகள் வழியாக பயங்கரவாத கருத்துகளை பரப்பி வந்துள்ளார். இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர், அவர்களிடம் ஸ்மார்ட்போன்களும் இணைய வசதியும் உள்ளன. இதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அல் குவைதா டிஜிட்டல் முறையில் ஆட்களை சேர்க்கிறது.
எல்லை தாண்டி சென்று துப்பாக்கி பயிற்சி அளிப்பதற்கு பதிலாக, இணையம் வழியாக இளைஞர்களின் மனதில் பயங்கரவாத விதையை விதைத்து நீண்டகால திட்டங்களை செயல்படுத்த அல் குவைதா தயாராகி வருகிறது. உடனடி தாக்குதல்களுக்கு அல்லாமல், நீண்டகால சதித் திட்டங்களுக்கு இந்த உயர்தர நபர்களை பயன்படுத்த திட்டமிடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்: சமூகத்தில் சந்தேகத்துக்கு இடமில்லாத நபர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் இந்த புதிய உத்தி ஆபத்தானது. இளைஞர்கள் இணையத்தில் வரும் தீவிரவாத உள்ளடக்கங்களை உடனே தவிர்க்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்! ஜெகா வாங்கிய நெதன்யாகு! இந்திய பயணம் ரத்து!