வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை 'ஆபரேஷன் ட்ரைடென்ட்' (Operation Trident) என்ற பெயரிலான ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மூலம் மத்திய புலனாய்வு அமைப்புகளும் மாநிலக் காவல்துறையினரும் இணைந்து கூண்டோடு தகர்த்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கடந்த அக்டோபர் 23 அன்று அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் 38 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநிலப் புலனாய்வு அமைப்புகள் மின்னல் வேக சோதனைகளை மேற்கொண்டன. இந்த அதிரடி வேட்டையில் சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 18 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் சுமார் ₹100 கோடி மதிப்பிலான சட்டவிரோத ஹவாலா பணப்பரிமாற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும், போதைப்பொருள் நெட்வொர்க்குடன் தொடர்புடைய 1,424 வங்கிக் கணக்குகளைப் புலனாய்வு அமைப்புகள் உடனடியாக முடக்கியுள்ளன. கடத்தல் குற்றவாளிகளுக்குச் சொந்தமான ₹17.82 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், சோதனையின் போது 500 டெட்டனேட்டர்கள் (வெடிபொருட்கள்) மற்றும் ₹12 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இத கவனமா கேட்டுக்கோங்க ராகுல்.. அடுத்த 30 வருஷத்துக்கு காங். ஆட்சிக்கு வராது..!! அமித்ஷா அதிரடி!!

இந்த சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் இந்தியா, மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய மரண முக்கோண காரிடார் வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்ததாக அமித் ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.
வரும் 2029 டிசம்பர் 31-க்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு போதைப்பொருள் நெட்வொர்க்கையும் அடியோடு வேரறுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இமாலய இலக்கிற்கு இந்த நடவடிக்கை ஒரு சான்றாக அமைந்துள்ளது என்றும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கப்படும் வரை மத்திய அமைப்புகளின் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். இந்த வெற்றிகரமான திட்டத்தை முன்னெடுத்த மத்திய அமைப்புகள் மற்றும் மூன்று மாநிலக் காவல் துறையினருக்கு அமித் ஷா தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாட்டின் முதல் எல்.என்.ஜி. ரயில் ..... சபர்மதியில் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்!