டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பாட்டியின் மறைவு தொடர்பான காணொளி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த கட்சித் தலைவர்கள், மும்பையிலிருந்து விமானத்தில் டெல்லி வந்தபோது, இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானத்திற்குள்ளேயே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
அபிஜீத் தீப்கேவுடன் இணை ஒருங்கிணைப்பாளர்கள் அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாகக் கூறி, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், ஓராண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டம் சந்துக் பிம்ப்ரி கிராமத்தில் தீப்கேவின் பாட்டி சவித்ரிபாய் சங்கர்ராவ் தீப்கே (85) உயிரிழந்தார். காவல்துறை வெளியிட்ட காணொளியில், ஒரு பெண் அதிகாரி இரங்கல் தெரிவித்து, தண்ணீர் கொடுத்து, வீட்டிற்குச் செல்ல விரும்பினால் பேருந்து அல்லது விமானம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியதைக் காணலாம். தீப்கே “நான் இங்கேயே இருப்பேன்” என மறுத்ததாகவும் காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அக்.10..!! இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும்!! டெல்லி போலீசுக்கு சவால்விட்ட கரப்பான்பூச்சி கட்சி..!!

ஆனால் தீப்கே இக்காணொளி திருத்தப்பட்டது எனக் குற்றம் சாட்டியுள்ளார். “முழு காணொளியையும் வெளியிடுங்கள். என் உறவினரிடம் பேசவும், வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கவில்லை. தொலைபேசியைக் கூட கொடுக்கவில்லை” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், தான் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதைக் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல், அதிகாலை 3.30 மணிக்கு பெற்றோரை அழைத்து மேலும் மன உளைச்சல் ஏற்படுத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார்.
“பாட்டியை இழந்த பெற்றோருக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்க விரும்பவில்லை. காவல்துறை என்னையும் குடும்பத்தையும் மனரீதியாக துன்புறுத்தியது” என அவர் கூறினார். காவல்துறை தரப்பில் உதவி வழங்கப்பட்டதாகவும், அவர் மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பு வாதங்களும் தொடர்கின்றன.
இதையும் படிங்க: 'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!