தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கட்சிினரும் தங்கள் தொகுதியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே அந்தந்த தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் மற்றும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோரை திரட்டி பல்வேறு விவாத நிகழ்ச்சிகள் ஊடகங்களில் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் தேர்தல் விவாத நிகழ்ச்சியில் நடந்தேறிய வன்முறை, தமிழக அரசியல் களத்தின் சகிப்புத்தன்மையற்ற தன்மையை தோலுரித்துக் காட்டி இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி பேசிக்கொண்டிருந்தபோது, மாற்றுக்கருத்தை எதிர்கொள்ள முடியாமல் ஆளுங்கட்சியான திமுகவினர் மேடையை நோக்கி நாற்காலிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.

அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இந்த மோதலில், நடுநிலையோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நெறியாளர் தலையில் பலத்த காயமடைந்ததும், செய்தியாளர் தாக்கப்பட்டதும், தமிழகத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களுக்கு எந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதையே அப்பட்டமாக உணர்த்துகிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்ன பிரதமரே நீங்க ரெடியா? மக்களுக்கு எதுக்கு அறிவுரை?... முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
பத்திரிகைச் சுதந்திரம் என மேடையில் பேசுவது., தேர்தல் களத்தில் ஊடகத்தினர் மண்டையை உடைப்பது… இதுதான் தி.மு.க-வின் ஜனநாயக மாண்பா என்று கேள்வி எழுப்பினார். அதிகாரத் திமிரில் நடக்கும் இந்த அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது என்றும் வளர்மதி கேட்டுள்ளார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்த அராஜகத்தை மக்கள் மன்றம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்று கூறிய முன்னாள் அமைச்சர் வளர்மதி விழித்துக்கொள் தமிழகமே என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் செலவுக்கு பணம் பதுக்கல்...?! - திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை... அதிர்த்து போன அதிகாரிகள்...!