அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் முறைப்படி கூட்டணி அமைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி சென்றடைந்தார். அங்கு அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த முதற்கட்டப் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்த அமித்ஷா, அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி. வேலுமணியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், சுமார் 20 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் தனியாகப் பேசியதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின் போது அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். குறிப்பாக, 2021 தேர்தலை விடக் கூடுதல் தொகுதிகளைப் பாஜக எதிர்பார்ப்பதாகவும், அதனைச் சமன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: “பாஜக எத்தனை அவதாரம் எடுத்தாலும் தோல்வி உறுதி!” சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!
திமுக எதிர்ப்பு மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பாக ஏற்கனவே ஆளுநரிடம் அளித்த பட்டியல்கள் குறித்தும், வரும் தேர்தலில் வலுவான மாற்றத்தை எப்படிக் கொண்டு வருவது என்பது குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசித்துள்ளனர். பாமகவின் வரவு கூட்டணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளதாக அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி விவரித்துள்ளார். இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்திக்காமல் எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் சென்னையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "நாங்க எப்போவுமே ஒண்ணுதான்!" தினகரன் உடனான நெருக்கம் குறித்து ஓ.பி.எஸ் சூசக பதில்!