கர்நாடக மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போலி வாக்காளர்கள் பட்டியல் மூலம் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி, இன்று ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாகக் கூறிய 1.5 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களைப் பகிருமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி, இந்த விவரங்களை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா குறித்த அவதூறு பேச்சு!! ஜார்க்கண்ட் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜர்!!
ராகுல் காந்தி, கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு போலி வாக்காளர்கள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டது முக்கிய காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பாஜக தரப்பில், இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அன்று பெங்களூரில் இந்த முறைகேடுகளுக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.

தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதம், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் அரங்கில் மேலும் விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டதா? ட்ரம்ப் குருட்டு விமர்சனத்திற்கு உருட்டுகிறார் ராகுல்காந்தி..