இஸ்ரோவின் 2026-ஆம் ஆண்டின் முதல் விண்வெளி ஏவுதல் நாளை (ஜனவரி 12, திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 10:17 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி62 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டின் முதன்மை பயன்பாடாக EOS-N1 (அன்வேஷா என்றும் அழைக்கப்படும்) என்ற ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் பூமியை நூற்றுக்கணக்கான நிறமாலைகளில் பார்க்கும் திறன் கொண்டது. இதனால் பொருட்களை அடையாளம் காணவும், எல்லை கண்காணிப்பு, விவசாயம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும்.
இதனுடன் சேர்த்து ஸ்பானிஷ் நிறுவனத்தின் கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் (KID) என்ற சிறிய சோதனை கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் பூமிக்கு திரும்பும் திறன் சோதனைக்கானது.
இதையும் படிங்க: இஸ்ரோவின் 2026 முதல் விண்வெளி சாதனை.. ஜன.12ல் விண்ணில் பாய்கிறது PSLV-C62 ராக்கெட்..!!
மேலும், இந்தியா, தாய்லாந்து, நேபாளம், பிரேசில், ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் 17 வணிக செயற்கைக்கோள்கள் (கோ-பயணிகள்) இதில் இடம்பெற்றுள்ளன. இதில் ஆன்போர்டு ரீஃப்யூலிங் (செயற்கைக்கோளுக்கு எரிபொருள் நிரப்புதல்) சோதனை, AI செயலாக்கம், அமெச்சூர் ரேடியோ, விவசாய கண்காணிப்பு போன்ற பல்வேறு புதுமையான திட்டங்கள் உள்ளன.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்பு பணிகள் முழுமையடைந்துவிட்டன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கவுண்ட்டவுன் தொடங்கியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் அனைத்து செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏவுதலுக்கு முந்தைய அனைத்து சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், “இது 2026-ஆம் ஆண்டின் முதல் ஏவுதல். இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 442 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பெருமை இஸ்ரோவுக்கு உள்ளது. இந்த பி.எஸ்.எல்.வி. தொடர் வெற்றிகரமாக தொடரும்” என்றார்.
இந்த ஏவுதல் இஸ்ரோவின் விண்வெளி திறனை மீண்டும் உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும். ஏவுதலை நேரலையில் ISRO-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் காணலாம்.
இதையும் படிங்க: 2027-ல் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும்… இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை..!