பெங்களூரு: காங்கிரஸ் கட்சி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (EVM) மீது தொடர்ந்து சந்தேகம் தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வு அதற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர்கள் EVMகளின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்டு வருகின்றனர். 2014, 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றபோது, EVMகளில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
தங்களின் தோல்விக்கு EVMகளே காரணம் என்று கூறி, தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. வரும் தேர்தலில் EVMகளுக்கு பதிலாக ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: ரூ.100+ கோடி போலி மருந்து ஊழல்! சிபிஐ கிடுக்குப்பிடி!! அரசியல் புள்ளிகள் திக்! திக்!!
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஓட்டுகள் திருடப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே, கலபுரகியில் ஓட்டுகள் திருடப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆலந்த் எம்எல்ஏ பி.ஆர். பாட்டீல், போலி வாக்காளர்கள் மூலம் தன்னை தோற்கடிக்க முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் EVMகளில் ஓட்டுகள் திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் பலமுறை EVMகளில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்று விளக்கம் அளித்தும் காங்கிரஸ் நம்பவில்லை. நீதிமன்றங்களும் EVMகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளன. இந்நிலையில், EVMகளின் நம்பகத்தன்மை குறித்து கர்நாடகாவில் ஆய்வு நடத்தப்பட்டது. அரசு சாரா தன்னார்வ அமைப்பின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வறிக்கையின்படி, கர்நாடகாவில் 85 சதவீதம் மக்கள் EVMகளை நம்புவதாக தெரிவித்துள்ளனர். அமைச்சர் பிரியங்க் கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியில் 94.8 சதவீதம் மக்களும், முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில் 88.59 சதவீதம் மக்களும் EVMகளை நம்புவதாக கூறியுள்ளனர். இந்த முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தோல்விக்கு EVMகளை காரணம் காட்டி வரும் நிலையில், இந்த ஆய்வு அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் EVMகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரசவ வார்டு அருகே சரக்கு பார்ட்டி?! இப்படியுமா இருக்கும் டாக்டர் ரூம்? 4 பேர் சஸ்பெண்ட்!