ஐதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து குறுக்கு வந்த பைக் மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்ததில் 23 உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு காவிரி டிராவல்ஸ் நிறுவனத்தின் வால்வோ பேருந்து டிரைவர், கிளினர் உள்பட 42 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்டது. பேருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், சின்னத்தேக்கூர் அருகே இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்ற போது, குறுக்கே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்கரில் தீப்பிடித்தது. சில நிமிடங்களில் பெரும் சத்தத்துடன் பேருந்திற்கும் தீ பரவியது. பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியதைக் கண்ட பயணிகள் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினர். ஜன்னல் வழியாக தப்பிய 12 பேர் உட்பட மொத்தம் 19 பேர் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலெக்டர் ஸ்ரீ , டிஐஜி பிரவீன் குமார், மாவட்ட எஸ்பி விக்ராந்த் பாட்டீல், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விபத்து நடந்த பிறகு பைக் பேருந்தின் அடியில் சென்றுள்ளது. இதில் பேருந்து கதவைத் திறக்கும் கேபிள் அறுந்து போனது. இதனால் பேருந்து கதவை திறக்க முடியாமல் பெரும்பாலான பயணிகள் உள்ளேயே சிக்கியுள்ளனர். இந்த கோர விபத்தில் 23 பயணிகள் இறந்துள்ளனர் . இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். பேருந்து தீப்பற்றியத்தும் ஓட்டுநர் மற்றும் கிளீனர் வெளியே குதித்து தப்பி ஓடியுள்ளனர். தற்போது ஓட்டுநரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிகாலையில் பயங்கரம்...!! அலறித்துடித்த பயணிகள்... பற்றி எரிந்த வால்வோ பேருந்து....23 பேர் உடல் கருகி பலி...!
கர்னூல் மாவட்டத்தில் நடந்த பயங்கர பேருந்து விபத்து குறித்து துபாய் சுற்று பயணத்தில் உள்ள முதல்வர் சந்திரபாபு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பேருந்து தீ விபத்தில் பலர் இறந்ததற்கு அவர் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசி விபத்து குறித்த விவரங்களை கேட்டறிந்து கொண்டார். அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் பரிந்துரைத்தார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் நிகழ்ந்த கோர தீ விபத்து சம்பவம்... பிரதமர் மோடி இரங்கல்... நிதியுதவி அறிவிப்பு...!