புதுச்சேரியை சேர்ந்தவர் இளம் மாடலிங் பெண் சான் ரேச்சல்(25).(சான் என்றால் சிவன்...ரேச்சல் என்றால் பொறுப்பு) சிறு வயதிலேயே தாயை இழந்த இவர் தந்தை காந்தியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். தந்தையின் ஊக்கத்தால் மாடலிங் துறையில் நுழைந்த சான் ரேச்சல் நிறம் கருப்பு. குழந்தை பருவம் முதல் நிறத்தால் பல சங்கடங்களை எதிர்கொண்டார். நிறத்தை காட்டி போடப்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்றி மாடலிங் துறையில் சாதித்தார்.
கருப்பு நிறம் உள்ளவர்களைக் குறைவாகவும், வெண்மை நிறம் கொண்டவர்களை உயர்வாகக் கருதும் சமுதாயத்தில் அதனை மாற்றி மாடலிங் துறையில் சாதித்த சான் ரேச்சல் இதன் பயனாக மிஸ் புதுச்சேரி 2021, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019 என அழகு போட்டிகளில் விருதுகளை குவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 100 அடி சாலை ஜான்சி நகரில் தனியாக வசித்து வந்தார். சில நாட்களாய் மன அழுத்தம் காரணமாக கடந்த 5-ம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட சான் ரேச்சலை, அவரது தந்தை காந்தி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இதையும் படிங்க: பெண் காவலரை கொடூரமாக தாக்கிய கைதி! இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நடவடிக்கை...
இரண்டு நாள் சிகிச்சை பெற்று வந்த சான் ரேச்சல் திடீரென மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகிவிட்டார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு உடல்நிலை மேலும் மோசம் அடையவே சிகிச்சைக்காக மூல குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் உயர் சிகிச்சைக்காக நேற்று ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சான் ரேச்சல் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து சான் ரேச்சல் தந்தை காந்தி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 25 வயதான மாடலின் அழகி சன் ரேச்சல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணங்களை விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சான் ரேச்சலின் தற்கொலைக்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. சிறுநீரக பிரச்னை மற்றும் மன உளைச்சல்: சான் ரேச்சல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இது மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நிதி நஷ்டம்: ஃபேஷன் ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததில் ஏற்பட்ட நிதி இழப்பு, அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கலாம். இருப்பினும், இந்தக் காரணங்கள் குறித்து உறுதியான ஆதாரங்கள் இல்லை.
மேலும் தற்கொலை செய்து கொண்ட மாடலின் அழகி சன் ரேச்சல் லண்டன் ஜெர்மன், பிரான்ஸ், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் கலந்து கொண்டு அழகி பட்டங்களை வென்றுள்ளார் என்பதும் பல்வேறு பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமாக பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாடலிங் அழகி சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பியாக 4 பேர் நியமனம்.. பாஜக அரசு கொடுத்த கவுரவம்.. நீளும் சாதனை பட்டியல்..