உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானாவில் வசிப்பவர் நௌமன் இலாஹி. இவர் பானிபட்டில் உள்ள ஹோலி காலனியில் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். மேலும் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர், ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய ராணுவத்தின் நடமாட்டம், ராணுவம் தொடர்பான தகவல்கள், இந்தியாவின் தற்போதைய நிலைமை, ரயில் நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் அவர் தொடர்பில் இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இவரை பானிபட் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நம்பகமான தகவல்கள் தங்களிடம் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் ஆதாரங்களைச் சேகரித்து நௌமன் இலாஹி என்ற நபரைக் கைது செய்ததாகவும் பானிபட் காவல் கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

இதுக்குறித்து அவர் பேசுகையில், நௌமன் இலாஹி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதோடு போலீஸ் காவலில் வைக்க கோரிக்கை விடுக்கப்படும். நௌமன் இலாஹியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த பெயர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

அதன் பிறகு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். விசாரணைக்குப் பிறகு வெளிவரும் உண்மைகள் என்ன என்பது தெரியவரும். அத்துடன் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது சந்தேகத்திற்கிடமான நபர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக நிர்வாகத்திற்குத் தெரிவிக்க மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!