இந்தியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாடுகளுக்கான அரசு முறை சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் இந்தப் பயணம், இந்திய ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முதல் வரலாற்று பயணமாக அமைந்துள்ளது.
டெல்லியில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜூலை 20-ஆம் தேதி மால்டோவா நாட்டிற்கு செல்கிறார். அங்கு மால்டோவா அதிபர் மாயா சாண்டுவை சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும், மால்டோவா நாடாளுமன்ற தலைவர் இகோர் குரோசுவை சந்திக்கும் ஜனாதிபதி, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்தியா - மால்டோவா நாடாளுமன்ற நட்புறவு குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். அங்கு நடைபெறும் வர்த்தக நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியா செல்லும் இந்திய ஜனாதிபதி! வரலாறு படைக்கும் திரவுபதி முர்மு!

இதனைத் தொடர்ந்து ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஜனாதிபதி முர்மு வடக்கு மாசிடோனியாவுக்கு செல்கிறார். அந்நாட்டு அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவாவின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தப் பயணத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
பின்னர் ஜூலை 23 முதல் 25-ஆம் தேதி வரை ருமேனியாவுக்கு ஜனாதிபதி பயணம் மேற்கொள்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் ருமேனியா செல்வது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு தலைவர்களுடன் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த மூன்று நாடுகளும் ஐரோப்பிய பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன. உக்ரைன் போர், உலகளாவிய பாதுகாப்பு சவால்கள், வர்த்தக மாற்றங்கள் உள்ளிட்ட சூழலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை விரிவுபடுத்தும் முயற்சியாக இந்த பயணம் பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் மூலம் வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட பல துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உலகளாவிய தூதரக உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக ஜனாதிபதி முர்முவின் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!