கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில் முக்கியமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று 18 படிகளை ஏறி நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருவதால் நடை நவம்பர் 16 ஆம் தேதி திறந்தது முதல் பக்தர்கள் வருகை அதிகரித்து வந்தது. சில நாட்களில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்தனர். சபரிமலையில் கூடிய வரலாறு காணாத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி சில பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்றன.
இதனால் தீவிர ஆலோசனை நடத்திய சபரிமலை தேவசம் போர்டு, பக்தர்களை தரிசனத்திற்காக அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இதன்படி நேரடியாக 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பார்ட் புக்கிங் மூலமாக 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மரக்கூட்டத்தில் இருந்து எட்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசன்ம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “இவர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள்” - ஐயப்ப பக்தர்களுக்கு ஷாக் கொடுத்த தேவசம் போர்டு...!
மண்டல விளக்கு தொடர்பான கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசார் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் தந்திரியுடன் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள 45 நிமிடங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மதியம் மற்றும் இரவு நேங்களில் கோவில் நடை அடைக்கும் நேரத்தை நீட்டித்துள்ளனர். அதன்படி, 1 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை, 1:30 மணி வரையும், இரவில், 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதற்கு பதிலாக, 11:15 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவிலின், 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு, 80 பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள, 45 நிமிடங்களில் கூடுதலாக, 3,500 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். மேலும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள், நடக்க சிரமப்படுபவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வருபவர்கள் பாரம்பரிய வனப் பாதையைத் தவிர்த்து, நிலக்கல்-பம்பா பாதை வழியாக சன்னிதானம் வந்தடைய வேண்டும் என தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் அதிகமிருப்பதாலும், வனப் பாதையில் அதிகரித்து வரும் நெரிசலை எதிர்கொண்டு அவசர மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிரமத்தை சுட்டிக்காட்டியும் தேவசம் போர்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை திறந்து காட்டிய கேரள போலீஸ்... சபரிமலையில் தெலுங்கு பத்தர்களுக்கு நேர்ந்த அவமானம்... கொந்தளிந்த ஆந்திர எம்.எல்.ஏ...!