கேரளாவின் பிரபல சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடந்த தங்கத் திருட்டு வழக்கில், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கருவறை கதவுகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட இந்த வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவினர் (எஸ்.ஐ.டி.) அவரை கைது செய்து, 10 நாட்கள் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.
சபரிமலை கோவில் பக்தர்களின் பெருமையான காணிக்கையாக, தொழிலதிபர் விஜய் மல்லையா கிலோகணக்கில் தங்கம் அளித்தார். இதன் அடிப்படையில், கோவிலின் மேற்கூரை, கருவறை கதவுகள், துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கத் தகடுகள் பூசப்பட்டன. 2019-ல் பராமரிப்புப் பணிக்காக, துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகள் கழற்றப்பட்டு, பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் கொடுக்கப்பட்டன. அவர் அவற்றை சென்னைக்கு அனுப்பி, தங்க முலாம் பூசும் பணியை முடித்து திரும்ப அளித்தார்.
ஆனால், திருப்பி அளிக்கப்பட்ட தகடுகளின் எடை 4 கிலோவுக்கு குறைவாக இருந்தது. இதைத் தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. இதில், துவாரபாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கின் முதல் குற்றவாளியாக உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட சிலைகளின் பீடங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: சபரிமலை கோயிலில் மாயமான தங்கம்! இமெயில் கடிதத்தில் புதிய திருப்பம்! கோர்ட் அதிர்ச்சி!!

இந்நிலையில், கருவறை கதவுகளில் இருந்து தங்கம் திருட்டு தொடர்பான இரண்டாவது வழக்கிலும், போத்தி நேற்று (நவம்பர் 3) மீண்டும் கைது செய்யப்பட்டார். ரான்னி மாவட்ட நீதிமன்றம் 10 நாட்கள் காவலை அனுமதித்ததைத் தொடர்ந்து, அவர் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது, 2019-ல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக இருந்த என். வாசுவிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன.
பராமரிப்புப் பணி முடிந்த பின், மீதமுள்ள தங்கத்தை ஏழைப் பெண் திருமணத்துக்கு தானமாக அளிக்கலாமா என, போத்தி வாசுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனால், அவர் மீதும் சந்தேகம் ஏற்கனவே உள்ளது. முன்னதாக, தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகள் முராரி பாபு, சுதீஷ் குமார் ஆகியோரும் இம்முறைகேடுகளுக்கு தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சபரிமலை பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு குழு விரைவில் உண்மையான தங்கத் திருட்டின் அளவையும், தொடர்புடையவர்களையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில் நிர்வாகத்தின் மீது பக்தர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பில் சமரசமே இல்ல.. பாஜகவின் வழக்கம் தெரியுமா? திமுக திட்டவட்டம்...!