இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்நிறுத்த உடன்படிக்கையை மீறினால் ஹமாஸ் அமைப்புக்கு "வேகமான, தீவிரமான, கொடூரமான முடிவு" ஏற்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார். காசாவில் ஹமாஸ் உள்ளூர் குழுக்களுடன் மோதல் தொடரும் நிலையில், அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை அமல்படுத்த மத்திய கிழக்கு நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீடித்த போரில் 67,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அக்டோபர் தொடக்கத்தில் டிரம்பின் தலையீட்டால் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் ஹமாஸ் 20 இஸ்ரேல் பிணையாளர்களை விடுவித்தது.
ஆனால், போர்நிறுத்தத்துக்குப் பிறகு காசாவில் ஹமாஸ் உள்ளூர் குழுக்களுடன் (இஸ்ரேல் சார்பாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்) மோதல் வெடித்தது. சமீபத்தில் ஹமாஸ் 8 பேரை தூக்குத் தண்டனை அளித்தது. இதில் பொது இடத்தில் தூக்கிடப்பட்ட சம்பவம் உள்ளிட்ட வன்முறைகள் பதிவாகின. ஹமாஸ் இஸ்ரேல் ராணுவத்தின் மீது குண்டு வீசியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். "காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஹமாஸை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் முன்பு எச்சரித்திருந்தார்.
இதையும் படிங்க: பிணைக்கைதிகளின் உடலுக்கு பதில் வேறு உடல்! ஹமாஸ் செயலால் இஸ்ரேல் கொதிப்பு!
இப்போது வெளியிட்ட அறிக்கையில், "ஹமாஸ் அமைதியை மீறினால் அல்லது மோசமாக நடந்தால், காசாவுக்கு சென்று அவர்களை நேருக்கு நேர் சந்திக்க தயாரான பெரிய படைகளுடன் மத்திய கிழக்கு நட்பு நாடுகள் என்னிடம் உறுதியாக தெரிவித்துள்ளன. கடந்த 1,000 ஆண்டுகளில் இவ்வளவு அன்பு மற்றும் உற்சாகத்தை பார்க்கவில்லை. இது அழகான விஷயம்.
ஆனால் இன்னும் முழுமையான அமைதி எற்படவில்லை என்று அந்த நாடுகளிடமும் இஸ்ரேலிடமும் கூறியுள்ளேன். ஹமாஸ் சரியான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. செய்யாவிட்டால், அவர்களின் முடிவு வேகமாகவும், தீவிரமாகவும், கொடூரமாகவும் இருக்கும்" என்று டிரம்ப் கூறினார்.

டிரம்பின் 20 அம்ச திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும், காசா ஆளும் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும், இஸ்ரேல் வெளியேறி பாலஸ்தீன் நாட்டுக்கு வழி வகுக்க வேண்டும் என அம்சங்கள் உள்ளன. ஹமாஸ் இதை ஏற்கவில்லை.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இஸ்ரேலில் நடத்திய சந்திப்பில், "போர்நிறுத்தம் எதிர்பார்ப்பை விட நன்றாக உள்ளது, ஆனால் ஹமாஸ் ஒத்துக்கொள்ளாவிட்டால் அழிக்கப்படும்" என்று எச்சரித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ், "இஸ்ரேல் உடன்படிக்கையை மீறுகிறது" என குற்றம்சாட்டியுள்ளது. எகிப்து, கத்தார், துருக்கி போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்கின்றன. இந்தோனேஷியாவுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். போர்நிறுத்தம் சர்ச்சையில் மாறியுள்ள நிலையில், காசாவில் மனிதாபிமான உதவி தொடர்கிறது. ஆனால், 87 பாலஸ்தீனர்கள் போர்நிறுத்தத்துக்குப் பிறகு இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: ட்ரம்பை பாராட்டிய பில் கிளிண்டன்! அமெரிக்க அதிபரின் THUG ரிப்ளை!