தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கியூஆர் குறியீடு கொண்ட அனுமதி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண தொண்டர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஈரோடு பகுதியில் பிரசாரம் செய்த அவர், வரும் 30-ஆம் தேதி சேலத்தில் பெரும் பிரசார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே, கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கியூஆர் குறியீடு கொண்ட அனுமதி அட்டை கட்டாயம் என்று கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படம்!! ஆனால்! ஈரோடு நிகழ்ச்சிக்கு செங்கோட்டையன் கெட்டப் வைரல்!
தவெகவின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இதே கெடுபிடி தொடர்கிறது. மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சாதாரண தொண்டர்களால் பங்கேற்க முடியவில்லை என்று கட்சி வட்டாரங்களில் புகார் எழுந்துள்ளது.

கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை விட தவெகவில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். சினிமா விழாக்களைப் போல கியூஆர் குறியீடு அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், தொண்டர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
விஜயை நேரில் பார்க்கும் ஆர்வத்தில், அவரது வாகனம் செல்லும்போது ஆபத்தான முறையில் பின் தொடர்கின்றனர். இதனால் சிலர் விபத்தில் சிக்குவதும் உள்ளது. திமுக, அதிமுக நிகழ்ச்சிகளில் தொண்டர்களுக்கு பரிசுப் பொருட்கள், உணவு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தவெகவில் இதுபோன்ற நடைமுறை இல்லை என்று தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதை மாற்றி, சாதாரண தொண்டர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி உட்புற வட்டாரங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த அதிருப்தி தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு வரைக்கும் வந்தீங்களே!! கரூருக்கு போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!