பதாவூன் (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம் பதாவூன் மாவட்டத்தில் வெறிநாய் கடித்த எருமை மாட்டின் பாலால் தயாரிக்கப்பட்ட ரைத்தாவை சாப்பிட்ட கிராம மக்கள் பீதியடைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு எருமை மாட்டுப் பாலில் தயாரிக்கப்பட்ட ரைத்தா பரிமாறப்பட்டது. ஏராளமான கிராம மக்கள் இதை சாப்பிட்டனர்.
இந்நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி ரைத்தாவுக்கு பயன்படுத்தப்பட்ட பாலைத் தந்த எருமை மாடு தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து கிராமத்தில் வதந்திகள் வேகமாகப் பரவின.
இதையும் படிங்க: நாடே பேரதிர்ச்சி... ஒரே மாநிலத்தில் இருந்து 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்... SIR கொடுத்த ஷாக்...!
பீதியடைந்த மக்கள் வெறிநாய்க் கடி தடுப்பூசி கேட்டு உள்ளூர் சுகாதார மையத்தில் ஒரே நேரத்தில் குவிந்தனர். ஏராளமானோர் தடுப்பூசி கோரியதால் மருத்துவர்களும் நர்சுகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கிராமத்துக்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களுக்கு ஆலோசனை வழங்கினர். தேவையானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மருத்துவர்கள் இது குறித்து தெரிவித்ததாவது: “காய்ச்சிய பால் மூலம் வெறிநாய்க் கடி நோய் பரவுவது சாத்தியமில்லை. இருப்பினும் மக்களின் பீதியைப் போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தினோம். இதுவரை கிராமத்தில் எந்த நோய் அறிகுறியும் பதிவாகவில்லை. வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வதந்திகள் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் கிராம நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: பாமக செயற்குழு தீர்மானங்கள்: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் எடுப்பதே இறுதி முடிவு!