கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடி குற்றச்சாட்டுடன் தனது பெயர் இணைத்துப் பேசப்படுவதாகக் கூறி, நடிகை ஜனனி அசோக் குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 634 கோடி ரூபாய் விவகாரத்தில் தனது பெயரை இணைத்துத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தனக்குத் தொடர்பு இல்லை என்றும், அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றிப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!
உண்மைத்தன்மையை ஆராயாமலும், சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்காமலும் ஆதாரமற்ற கடுமையான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் மீது விசாரணை கோரப்படுவதாலேயே அவர் தவறு செய்துவிட்டார் என்று அர்த்தமாகிவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.
எந்தவிதப் பின்புலமும் இன்றி, சுயமாகவும் கண்ணியத்துடனும் தனது வாழ்க்கையையும் திரைத்துறைப் பயணத்தையும் கட்டமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உண்மை தெரியாமல் சமூக வலைதளப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெண் மீது எளிதில் பழி சுமத்துவது மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையில் இனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஊடகங்களும் சமூக வலைதளப் பயனாளர்களும் எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்திய பிறகே வெளியிட வேண்டும் என்றும், தனது பெயரைத் தவறாக இணைத்து வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்கவோ அல்லது திருத்தவோ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சூழலில், தனக்கு ஆதரவாக நின்ற திரைத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகை ஜனனி அசோக் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொலை, கொள்ளை சம்பவங்களை திசைதிருப்பவே சோதனை..! எதுவும் சிக்கல..! கே. என். நேரு பேட்டி..!