பா.ஜ.,வில் இருந்து விலகிய அண்ணாமலை செப்.14 ல் புதிய கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்க உள்ளதுடன், அதன்பின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
பா.ஜ.,வில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை செப்டம்பர் 14 அன்று தமிழகத்தில் புதிய கட்சியின் பெயர், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை அறிவிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மாநிலம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ.,வில் இருந்து விலகிய உடனேயே இமயமலைக்கு சென்ற அண்ணாமலை, ஏற்கனவே ஒப்புக்கொண்ட கல்லூரி விழாவில் பங்கேற்க ஒருநாள் கோவை வந்தார். அதன் பின்னர் மீண்டும் இமயமலைக்கே சென்றுவிட்டார். அவரது ‘We the Leaders’ அமைப்பில் தினசரி ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். புதிய கட்சி குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் அண்ணாமலை, தமிழகம் திரும்பிய பிறகு இளைஞர்களை அரசியல்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

இதன் முதல் கட்டமாக ஜூன் 19 முதல் 21 வரை அரவக்குறிச்சியில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அண்ணாமலையின் ஆதரவாளரும், பா.ஜ., ஊடகப் பிரிவின் முன்னாள் செயலாளருமான விஷ்ணுபிரசாத் இதுகுறித்து கூறுகையில், “இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கும் வகையில் விரைவில் மாவட்டம் தோறும் பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.
செப்டம்பர் 14 அன்று புதிய கட்சியின் பெயர், கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை அண்ணாமலை அறிவிக்க உள்ளதுடன், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளையும் அறிவிக்கவிருக்கிறார். பெரும்பாலான நிர்வாகிகள் 50 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.,வில் இருந்து விலகிய பிறகு அவர் எடுக்கும் ஒவ்வொரு அடியும் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. ‘We the Leaders’ அமைப்பு வழியாக ஏற்கனவே இளைஞர்களை ஒன்றிணைத்த அண்ணாமலை, புதிய கட்சியின் மூலம் தமிழக அரசியலை கலக்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அடுத்த சில மாதங்களில் அண்ணாமலை தமிழக அரசியலில் எந்தெந்த மாற்றங்களை கொண்டு வரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இளைஞர்களை மையப்படுத்திய அவரது அணுகுமுறை தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!