நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில், சீன விவகாரம் குறித்து பேச ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். பிப்ரவரி 4ஆம் தேதி பிரதமர் மோடி நன்றி உரை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று மோடி அவைக்கு வரவில்லை.
இதுகுறித்து ஓம் பிர்லா பின்னர் விளக்கம் அளித்தார். “பிரதமரை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன். எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் அவருக்கு எதிராக சதி திட்டமிட்டிருந்தனர்” என்று கூறினார். இந்த கருத்தால் எதிர்க்கட்சி தரப்பில் பெரும் கண்டனம் எழுந்தது. பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்தியதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை மக்களவை செயலகத்தில் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த நோட்டீஸில் பெரும் தொழில்நுட்ப பிழை இருப்பது தெரிய வந்துள்ளது. 2026 பிப்ரவரி என்று இருக்க வேண்டிய இடத்தில் நான்கு இடங்களில் 2025 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!
மக்களவை செயலக வட்டாரங்கள் கூறுகையில், விதிகளின்படி இந்த பிழை காரணமாக நோட்டீஸ் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றனர். இருப்பினும், சபாநாயகர் ஓம் பிர்லா இதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார். “நோட்டீஸை நிராகரிக்க வேண்டாம். பிழையை திருத்தம் செய்து ஏற்றுக்கொண்டு, விதிகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் நோட்டீஸ் செல்லுபடியாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் தற்போதைய முதல்கட்ட அமர்வில் இந்த தீர்மானம் விவாதத்துக்கு வர வாய்ப்பில்லை. மார்ச் மாதம் தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வில்தான் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிழை சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி நோட்டீஸ் தாக்கல் செய்த விதம், சபாநாயகரின் அணுகுமுறை ஆகியவை அரசியல் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!