தமிழக சட்டசபையின் 17வது கூட்டத் தொடரின் முதல் நாள் இன்று அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், உறுதிமொழி வாசகங்களாலும் கவனம் பெற்றது. புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்த நிலையில், “கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்” மற்றும் “உளமாற உறுதி கூறுகிறேன்” என்ற இரண்டு விதமான உறுதிமொழி முறைகள் பேசுபொருளாக மாறின.
முதலமைச்சராக பதவியேற்ற போது “கடவுள் மீது ஆணையாக” என கூறி பதவியேற்ற தவெக தலைவர் விஜய், இன்று பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்கும் போது “உளமாற உறுதி கூறுகிறேன்” என்ற வாசகத்தை தேர்வு செய்தது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இதை பலரும் விஜயின் அரசியல் அணுகுமுறையில் காணப்படும் மாற்றமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
சட்டசபையில் பதவியேற்ற உறுப்பினர்களில் பலர் “கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்” என்ற வாசகத்தை பயன்படுத்தினர். தவெக சார்பில் அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் அந்த முறையில் பதவியேற்றனர்.
இதையும் படிங்க: விஜய் அரசின் முதல் வெற்றி! ஸ்மார்ட் மூவ்!! சபாநாயகர் தேர்தலில் தவெக ஜேசிடி பிரபாகர் போட்டி!

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன் உள்ளிட்டோரும் அதே வாசகத்தை பயன்படுத்தினர். மேலும் காங்கிரஸ், பாஜக, தேமுதிக உறுப்பினர்களும் “கடவுள் அறிய” என்ற முறையில் உறுதிமொழி எடுத்தனர்.
மறுபுறம், “உளமாற உறுதி கூறுகிறேன்” என்ற வாசகத்தை தேர்வு செய்தவர்களில் முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, ஓ.பன்னீர்செல்வம், திமுக மூத்த தலைவர் கே.கே.எஸ்.ஆர்.ராமசந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
ஒரே சட்டசபையில் இருவிதமான உறுதிமொழி முறைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் மதச்சார்பின்மை மற்றும் தனிநபர் அரசியல் அடையாளம் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக விஜய் எடுத்திருக்கும் இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “முதல்வராக ஒரு முறை, எம்எல்ஏவாக மற்றொரு முறை” என்ற கருத்துக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: பதவியேற்பதை தவிர்க்கிறார்களா அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?! இதுவரை 7 பேர் பதவியேற்கவில்லை! உட்கட்சி பூசல் காரணமா?