மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பாகத் திமுக அரசு முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுகவின் தேர்தல் வாக்குறுதி தோல்வி குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், ஊதியம் அதிகரிக்கப்படும் என்றும் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, "மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இன்றுவரை அந்த வாக்குறுதியைத் திமுக நிறைவேற்றவில்லை. ஏழை எளிய மக்களுக்குத் திமுக அரசு இழைத்துவரும் இந்தப் பச்சைத் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று சாடினார்.
விவசாயிகளின் அடையாளமான 'பச்சைத் துண்டு' குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பச்சைத் துரோகத்தைச் செய்துவிட்டு, விவசாயிகளின் அடையாளமான பச்சைத் துண்டு பற்றிப் பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கிறது? கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு வாய் வீரம் காட்டுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இருமொழி என்று வெளிவேஷம் போடுகிறது திமுக அரசு - இபிஎஸ் கண்டனம்
மத்திய அரசின் புதிய முன்னெடுப்புகள் குறித்துப் பேசிய அவர், 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதை வரவேற்பதாகத் தெரிவித்தார். அதே வேளையில், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றித் தொடர வேண்டும்" என்று மத்திய அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அளவில் தான் கொடுத்த 150 நாள் வேலை வாக்குறுதியைச் செயல்படுத்தாத திமுக, மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்பதே எடப்பாடி பழனிசாமியின் பிரதானக் குற்றச்சாட்டாக உள்ளது.
இதையும் படிங்க: அவலநிலையில் சேலம் அரசு மருத்துவமனை… என்னதான் செய்றீங்க? கொந்தளித்த அண்ணாமலை…!