திமுக-வின் 'வெற்றித் தமிழ்ப் பெண்கள்' டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு வரும் 26-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற உள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-வின் கூட்டணி முயற்சிகளையும், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதிமுக அமைத்து வரும் கூட்டணி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, தங்களுக்குள் எந்தவிதமான புரிதலும் இல்லாதவர்கள், யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொண்டு அமைக்கும் கூட்டணி எப்படி வெற்றி பெறும்?என்று கனிமொழி வினவினார். அதிமுக-வுக்குள் ஒற்றுமையே இல்லாத நிலையில், அந்தக் கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், வரும் நாட்களில் அதிமுக-வின் நிலைமை என்னவாகுமோ என்று அனைவரும் கவலைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தேர்தல் நெருங்குவதால் அடிக்கடி தமிழகம் வருவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய கனிமொழி, ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டு, பின்னர் செயல்படுத்தப்படாமல் மறக்கப்பட்ட திட்டங்களையே அதிமுக மீண்டும் வாக்குறுதிகளாக அளிக்கிறது எனச் சாடினார். குறிப்பாக, 2018-இல் பிரதமரை அழைத்து வந்து தொடங்கப்பட்டு, பின்னர் எவருக்கும் சரியாகச் சென்றடையாத 'ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை' இப்போது மீண்டும் அறிவித்திருப்பதை அவர் விமர்சித்தார். திமுக அரசு ஒரு கோடிக்கும் மேலான மகளிருக்கு உரிமைத் தொகை மற்றும் விடியல் பேருந்துப் பயணம் மூலம் உண்மையான மேம்பாட்டைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆளுநர்களின் நடவடிக்கைக்குக் கண்டனம்; எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக முடிவு!
வரும் 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில், சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில், 100 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தலும், 100 ஏக்கரில் வாகன நிறுத்துமிடமும் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இன்று நடைபெற்ற ஆய்வின் போது, எம்.பி. முரசொலி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு போவாருன்னு தெரியும்.. வெட்டத்தான் ஆடு வாங்குறாங்க! தினகரனை விமர்சித்த ஆதவ் அர்ஜூனா.. !