சென்னை, டிசம்பர் 13: வரும் சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இளைஞரணி சார்பில் “வெல்வோம் 200; படைப்போம் வரலாறு” என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போட்டியிடுவதால் இளம் வாக்காளர்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக சர்வேக்கள் தெரிவிப்பதால், திமுக இளைஞரணியின் பங்களிப்பை அதிகரிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தார்.
இதன்படி, கட்சியின் அனைத்து அமைப்பு ரீதியான பூத் கமிட்டிகள், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைகள் வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இளைஞரணியில் புதிதாக 5 லட்சம் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்களைத் தேர்தலுக்கு தயார்படுத்தும் நோக்கில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது.
இதையும் படிங்க: நயினார் டெல்லி ட்ரிப்! ஓபிஎஸ் கூட்டம் ஒத்திவைப்பு!! அப்போ அது கன்பார்ம் தானா?!
முதலில் தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது அது மாற்றப்பட்டு மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 91 சட்டசபை தொகுதிகளின் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டுக்கு 1.25 லட்சம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து ஜனவரி 3 ஆம் தேதி மதுரை மண்டல மாநாடும், ஜனவரி இறுதியில் கோவை மண்டல மாநாடும் நடத்தப்பட உள்ளன.
தவெகவின் தோற்றம் திமுகவுக்கு சவாலாக அமைந்துள்ள நிலையில், இளைஞரணியை வலுப்படுத்தி இளம் வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியாக இந்த மாநாடுகள் பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: அமித்ஷாவை தொடர்ந்து தமிழகம் வரும் மோடி!! நயினார் போடும் பிரமாண்ட ப்ளான்! பாஜக பக்கா ஸ்கெட்ச்!