சென்னை, டிசம்பர் 13: தமிழகத்தில் 2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் தமிழகம் வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் நிறைவு விழாவில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்த விழா புதுக்கோட்டையில் நடைபெறும் என்றும் தெரிகிறது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகளுடன், பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் கொடுத்த கேரண்டி!! திமுகவை உதறித்தள்ளும் ராகுல்காந்தி! தவெக + காங்., கூட்டணி கன்பார்ம்!
அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஏப்ரல் மாதமே இறுதி செய்யப்பட்டது. அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு தொகுதிகளில் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல், பாஜக தலைவர்களும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் “தமிழகம் தலைநிமிர்த்த தமிழனின் பயணம்” என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட சுற்றுப்பயணம் அக்டோபரில் மதுரையில் தொடங்கி நவம்பர் 22-ம் தேதி தூத்துக்குடியில் நிறைவு பெற்றது.

இரண்டாம் கட்டம் தேனியில் தொடங்கியது. இந்தச் சுற்றுப்பயணத்தின் நிறைவு விழா ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நெருங்கும் நிலையில், தேசியத் தலைவர்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. 2024 லோக்சபா தேர்தலின்போது பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்தது போல, இம்முறையும் தேர்தல் முடியும் வரை அவர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனியே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக மட்டுமே பெரிய கட்சியாக உள்ளது. ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் இணைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
தேர்தல் களத்தில் பிரதமர் மோடியின் வருகை பாஜக - அதிமுக கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: சின்ன சங்கடம் கூட வரக்கூடாது!! அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு!! அமித்ஷா வகுக்கும் வியூகம்!