தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தோற்கடிக்க, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் தீவிர திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் நெய்வேலி அல்லது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டார். ஆனால் நெய்வேலி தொகுதியில் சுரங்கம் தொடர்பான பணிகள் அதிகம் இருப்பதால், அங்கு பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் தி.மு.க. அந்த தொகுதியை வேல்முருகனுக்கு கொடுக்க மறுத்தது.
இதனால் அதிருப்தியடைந்த வேல்முருகன், தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறினார். தற்போது நெய்வேலி தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: ராமதாசை பற்றி அப்படி பேசாதீங்க..! 85 வயசுலையும்... மனம் திறந்த சீமான்..!!
இந்நிலையில், வேல்முருகனை எதிர்கொள்ள, மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகையை களமிறக்க தி.மு.க. தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. விருத்தாம்பிகை தற்போது ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியை நடத்தி வருகிறார். கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வன்னியர் சங்கம் வலுவாக உள்ளது.

விருத்தாம்பிகை ஏற்கனவே அந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவரை தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நெய்வேலி தொகுதியில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வியூகத்தை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்களான துரைமுருகன், பன்னீர்செல்வம் மற்றும் சிவசங்கர் ஆகிய மூவரும் இணைந்து தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியர் ஓட்டுகளை தி.மு.க. பக்கம் திருப்புவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
வேல்முருகன் தனித்து நின்றாலும், வன்னியர் சமுதாய வாக்குகளை பிளவுபடுத்தி அவரை தோற்கடிக்க தி.மு.க. தரப்பு முழு தயாரிப்பில் உள்ளது. இந்த வளர்ச்சி கடலூர் மாவட்ட அரசியலை முழுவதும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: Breaking! திமுக கூட்டணியில் இருந்து விலகியது தவாக!! 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி! வேல்முருகன் அறிவிப்பு!