நீதியே முக்கியம்… நிதி இரண்டாம் பட்சம் என்றும் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறைச்சாலை மரண வழக்கைச் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய சபரிவர்மன் என்பவர் சட்டவிரோதமாகக் குட்கா விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அம்மாவட்டத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்துள்ளார் என்றும் அவருடைய பிரேதப் பரிசோதனையில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது தெரிகிறது. கைதுக்கு முன் எந்தவிதமான வெளி மற்றும் உள் காயங்களும் இல்லாதபோது, 19 காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதை ஏற்படுத்தியவர்கள், ஒரு மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தும் அவ்வளவு கொடூரமாகத் தாக்க வேண்டிய அவசியம் என்ன, அதற்கான சூழ்நிலைகள் ஆகியவை குறித்து அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, மனிதநேயமிக்க ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

காவல்துறை சித்திரவதைகள் மற்றும் மரணங்கள், சிறைச்சாலை மரணங்கள் முற்றாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இந்தச் சம்பவங்கள் தொடர் நிகழ்வுகளாகின்றன என்றும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு மானாமதுரை கோவில் காவலர் அஜித் குமார் மரணம்; மூன்று மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் மரணம்; கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாத்தான்குளம் ஜெயராஜ் & பென்னிக்ஸ் மரணங்கள் நடந்தும், இது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருந்தும் கூட, காவல் நிலைய அத்துமீறல்கள் மட்டும் குறைந்தபாடில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தண்ணீர் வாங்குற ஐடியா இருக்கா..? என்ன ஆக்ஷன் எடுத்தீங்க..? கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!
எனவே, இப்பொழுது அவருடைய குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாயும் தற்காலிக அரசு வேலையும் கொடுப்பதற்குச் சென்ற அமைச்சர்கள் கூட, அவருடைய குடும்பத்தால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய அவர், சபரிவர்மனுடைய மரணத்திற்கு நீதி கிடைப்பதுதான் மிக முக்கியமே தவிர, நிதி இரண்டாம் பட்சமாகும் என்று கூறினார். மரணமடைந்து நான்கு தினங்களாகியும், அவர் பலியானதற்குத் தலையாய காரணம் யார் என்பது வெளிவராத சூழலில், அவருடைய குடும்பத்தார் இன்னும் அவரது பிரேதத்தைக்கூட வாங்காமல் போராடி வருகிறார்கள் என்று கூறியுள்ள கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு, நீதி நிலைநாட்டப்படும் வகையில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படக்கூடிய வகையில், இந்த விசாரணையைச் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "அரசு நெய்யில் SWEET செய்யக்கூடாது"..! கரூர் அரசு வேலை சர்ச்சை... கிருஷ்ணசாமி கண்டனம்..!